கத்தார் நாட்டுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் 5 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு


கத்தார் நாட்டுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் 5 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 9 Sept 2017 5:00 AM IST (Updated: 9 Sept 2017 4:34 AM IST)
t-max-icont-min-icon

கத்தார் நாட்டுக்கு மீன் பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் 5 பேர் நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கலெக்டரிடம் உறவினர்கள் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் கடியபட்டிணம் கிராமத்தை சேர்ந்த ஜெரால்டு ரீகன் (வயது 31), கரோலின் ஜாகின் (26), ஜாண் பிரபாகரன் (40), ரீகன் ஜியோ கிளாட்வின் (35) மற்றும் மிடாலத்தை சேர்ந்த ஜோஸ் (32) ஆகிய 5 பேரும் மீனவர்கள் ஆவார்கள். இவர்களின் உறவினர்கள், தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம் ஒரு மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெரால்டு ரீகன், கரோலின் ஜாகின், ஜாண் பிரபாகரன், ரீகன் ஜியோ கிளாட்வின் மற்றும் ஜோஸ் ஆகிய 5 மீனவர்களும் கத்தார் நாட்டில் தங்கி மீன்பிடித்து வந்தனர். இவர்கள் கடந்த மாதம் 25-ந்தேதி விசை படகில் வக்ரா என்ற கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது, மீனவர்கள் 5 பேரும் வளைகுடா நாடுகளின் சர்வதேச எல்லையை கடந்து மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறி, அபுதாபியில் இருந்து வந்த கடலோர காவல் படையினர் நடுக்கடலில் அவர்களை சிறை பிடித்து சென்றுள்ளனர். அவ்வாறு மீனவர்களை சிறைபிடித்த தகவலை இந்திய தூதரகத்துக்கு சம்பந்தப்பட்ட நாடு முறைப்படி தெரியப்படுத்தவில்லை.

சிறைபிடிக்கப்பட்டுள்ள கரோலின் ஜாகின் என்பவர் கடந்த 29-ந்தேதி கத்தார் நாட்டில் உள்ள இந்திய மீனவர் ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை கூறியுள்ளார். ஆனால் அவர்கள் எந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.
எனவே சிறையில் வாடும் மீனவர்கள் 5 பேரையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story