யானைகளின் ‘காவல் தெய்வம்’!
தாய்லாந்தில் கடுமையான பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட யானைகளின் காவல் தெய்வமாக விளங்குகிறார் ஒரு பெண்.
பெண்ணின் பெயர் லெக் செய்லர்ட். தாய்லாந்தின் வட பகுதியில் இருக்கும் சியாங் மய் மாகாணத்தில் அவர் வசிக்கிறார்.
தாய்லாந்தில் தேக்கு மரப் பட்டறைகளில் யானைகளை உபயோகப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் 1989–ல் தடைவிதித்தது. காலங்காலமாக கால்களில் சங்கிலிகளால் கட்டப்பட்டுக் கிடந்த யானைகள் சுதந்திரம் பெற்றன. இது தங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என விலங்கின ஆர்வலர்கள் ஆர்ப்பரித்தனர். யானைகளுக்கு விடுதலை கிடைத்துவிட்டது விண்ணதிர முழங்கினர்.
ஆனால் ஒரு விஷயத்தை அவர்கள் கவனிக்க மறந்திருந்தனர். அது, சங்கிலிகள் யானைகளுக்கு ஏற்படுத்தியிருந்த காயங்கள். அந்தக் காயங்கள் யானைகளின் உடலை மட்டுமின்றி, மனதையும் கடுமையாகப் பாதித்திருந்தன. யானைகளின் அந்த வலிகளை உணர்ந்த ஒருவராக லெக் மட்டுமே இருந்தார்.
தேக்கு மரப் பட்டறைகளிலிருந்து மீட்கப்பட்ட யானைகள் உடலளவிலும், மனதளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த லெக், அவற்றுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்தார். தான் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் பயனாய் 1996–ம் ஆண்டு ‘யானை இயற்கைப் பூங்கா’ என்ற பாதுகாப்புப் பூங்கா ஒன்றை அமைத்தார்.
மரம் சுமந்த யானைகள், சர்க்கஸ்களில் உபயோகப்படுத்தப்பட்ட யானைகள், சாலைகளில் பிச்சையெடுக்கப் பயன்படுத்தப்பட்ட யானைகள் என எங்கெல்லாம் அவை கொடுமைப்படுத்தப்பட்டனவோ அங்கிருந்தெல்லாம் அவற்றை மீட்டு பாதுகாக்கத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் பொருளாதார ரீதியில் இந்த முயற்சி சில சிக்கல்களைச் சந்தித்தது. சிலரோடு சேர்ந்து லெக் செயல்பட ஆரம்பித்தார். இந்தப் பூங்காவை வெறும் வருமானமாகப் பார்த்த அவர்கள், இந்த யானைகளைக் கொண்டு பல விளையாட்டுகளை நடத்தினர். அதற்கு லெக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார்.
‘‘இப்படியொரு செயலைச் செய்வதற்கு நாம் யானைகளை மீட்கத் தேவையில்லையே... அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?’’ என்று கோபமாகக் கேட்டார், லெக்.
‘‘அப்படியானால்... யானைகளைப் பராமரிக்க நிறையச் செலவாகிறதே... அதை எப்படிச் சமாளிப்பது?’’ என்ற கேள்விக்கு அவர் பதில் தேடத் தொடங்கினார்.
தற்போது இந்த யானை இயற்கைப் பூங்கா சிறந்த சூழலியல் சுற்றுலாத்தலமாக இயங்கி வருகிறது. இதன் மூலம் கணிசமான தொகையையும் ஈட்ட முடிகிறது. தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு நாடுகளிலும் இம்மாதிரியான 5 பூங்காக்களை அமைத்திருக்கிறார் லெக்.
பூங்காவில் இருக்கும் ஒவ்வொரு யானையின் இயல்பையும் மிகத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறார் இவர்.
‘‘இவள் பொறாமைக்காரி, இவன் பிடிவாதக்காரன், இவன் சேட்டைக்காரன், இவள் அதிகமாக குறும்பு செய்வாள்...’’ என அந்த யானைகளின் குணத்தை வேடிக்கையாக விவரிக்கிறார். பெரிய உருவம் கொண்ட யானைகளுடன் எந்தவிதப் பயமுமின்றி இயல்பாக அன்போடு பழகுகிறார். யானைகளும் அவரிடம் மிகவும் அன்புடன் நடந்துகொள்கின்றன.
யானைகளின் நேசத்தை எப்படிச் சம்பாதித்தீர்கள் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டபோது, ‘‘இது எல்லாவற்றுக்கும் அடிப்படை அன்புதான். சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு புண்பட்டுப் போயிருந்த யானைகளுக்குத் தேவையான அன்பை நான் அள்ளிக் கொடுத்தேன். அந்த அன்பு, எங்கள் இரு தரப்புக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. அந்த நம்பிக்கையே எங்கள் உறவுக்கான ஆதாரமாகத் திகழ்கிறது’’ என்று எளிமையாகக் கூறுகிறார். லெக் செய்லர்ட் போன்ற மனிதநேயம் கொண்டவர்களால்தான் இந்தப் பூமியில் இன்னும் விலங்கினங்களுக்கு நிம்மதி மிஞ்சியிருக்கிறது.
Related Tags :
Next Story