அழிந்த ‘ராட்சத’ப் பறவை... வெளிவரும் ரகசியங்கள்
அழிந்துபோன, பறக்க முடியாத ராட்சதப் பறவையான ‘டோடோ’ பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
டோடா அழிந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர், அதுபற்றி கிடைத்த துப்புகளை எல்லாம் விஞ்ஞானிகள் ஒன்றாக இணைத்து ஆய்வு நடத்தி பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர்.
கி.பி. 1662–ம் ஆண்டில் இந்த இனத்தின் கடைசிப் பறவையும் மறைந்தது. இந்த ராட்சதப் பறவையின் எலும்பு மாதிரிகளை வைத்து நடத்திய ஆய்வில், இந்தப் பறவையின் குஞ்சு மிக விரைவாக வளர்ந்து பெரிதாகி விடுவது தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இறகுகள் விழுந்துவிடும் இந்தப் பறவை, பஞ்சு போன்ற சாம்பல் நிறத் தோலைக் கொண்டிருந்திருக்கிறது.
பிரான்ஸ் அருங்காட்சியகத்துக்கு சமீபத்தில் நன்கொடையாக வழங்கப்பட்ட மாதிரிகள் உள்பட அருங்காட்சியகங்களிலும், சேகரிப்புகளிலும் இன்னும் காணப்படும் டோடோ பறவையின் எலும்புகள் சிலவற்றை ஆய்வில் பயன்படுத்த தென்ஆப்பிரிக்கா கேப்டவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டெல்பின் ஆங்ஸ்டுக்கு வாய்ப்புக் கிடைத்தது.
அவருடைய அணியினர் 22 டோடோ பறவைகளின் எலும்புத் துண்டுகளை நுண்ணோக்கியில் பார்த்து, இந்த ராட்சதப் பறவையின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க முறைகள் பற்றி ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக்கு முன் டோடோ பற்றி குறைவான தகவல்களே அறியப்பட்டிருந்தன என்று கூறும் ஆங்ஸ்ட், இந்தப் பறவை ஆண்டில் ஒரு முறை மட்டுமே இனப்பெருக்கம் செய்திருக்கிறது என்றும், அதற்குப் பிறகு இறகு உதிர்ந்து விடுகிறது என்றும் எலும்பு திசுவியலைப் பயன்படுத்தி முதல்முறையாக விளக்க முடிந்துள்ளது எனத் தெரிவிக்கிறார்.
‘சயன்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ என்ற இதழில் வெளியாகி இருக்கும் இந்த ஆய்வு, வரலாற்றுச் சான்றுகளையும் கொண்டுள்ளது.
கடற்பயணிகள் டோடோ பறவை பற்றி முற்காலத்தில் எழுதியவற்றோடு, நாங்கள் எங்களுடைய அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி கண்டுபிடித்தவை அனைத்தும் மிகவும் சரியாகப் பொருந்து கின்றன என்று ஆங்கஸ்ட் கூறுகிறார்.
Related Tags :
Next Story