சங்கரன்கோவிலில் கழுத்தை அறுத்து மனைவி படுகொலை நடத்தையில் சந்தேகப்பட்டு கிளி ஜோதிடர் வெறிச்செயல்


சங்கரன்கோவிலில் கழுத்தை அறுத்து மனைவி படுகொலை  நடத்தையில் சந்தேகப்பட்டு கிளி ஜோதிடர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 10 Sept 2017 3:00 AM IST (Updated: 9 Sept 2017 6:01 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கிளி ஜோதிடர் போலீசில் சரண் அடைந்தார்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவிலில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கிளி ஜோதிடர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிளி ஜோதிடர்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பாரதி நகர் பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் அய்யப்பன்(வயது 35), கிளி ஜோதிடர். இவருடைய மனைவி முத்து(28). இவர்களுக்கு 2 வயதில் மணிராஜ் ஆண் குழந்தை உள்ளது.

அய்யப்பன், தனது மனைவி மற்றும் மகனுடன் சங்கரன்கோவில் பாரதியார் 4–வது தெருவில் உள்ள தனது தங்கை சின்னத்தாய் வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தார். அய்யப்பன் குடும்பத்தினர் ஒரு வீட்டிலும், அவருடைய தங்கை குடும்பத்தினர் அருகில் உள்ள மற்றொரு வீட்டிலும் தங்கி இருந்தனர்.

கழுத்தை அறுத்துக்கொலை

நேற்று காலையில் அய்யப்பன் மற்றும் குடும்பத்தினர் தங்கி இருந்த வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதைக்கண்ட அய்யப்பனின் மைத்துனர் தமிழரசன், அந்த வீட்டுக்கதவை திறந்து உள்ளே சென்றார். அங்கே கண்ட காட்சியால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அங்கு அய்யப்பனின் மனைவி முத்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். ஆட்டை அறுப்பது போன்று முத்துவின் கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டு இருந்தது. அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வாய் துணியால் கட்டப்பட்டு இருந்தது. அருகில் குழந்தை மணிராஜ் தூங்கிக்கொண்டிருந்தான். அய்யப்பனை காணவில்லை.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் அருள், ஜெட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முத்துவின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசில் சரண்

இதற்கிடையே முத்துவின் கணவர் அய்யப்பன் தேவர்குளம் போலீசில் சரண் அடைந்தார். சரண் அடைந்த அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

அதன் விவரம் வருமாறு:–

நடத்தையில் சந்தேகம்

அய்யப்பன் ஊர், ஊராக சென்று கிளி ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். அவருக்கும், முத்துவுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அதுவரை மகிழ்ச்சியாக சென்ற அவர்களது வாழ்வில், குழந்தை பிறந்த பிறகு புயல் வீச தொடங்கியது. முத்து அனைவரிடமும் சகஜமாக பேசி பழகக்கூடியவர். இதனால் அவர் நடத்தையில் அய்யப்பன் சந்தேகப்பட்டு வந்தார்.

இதுதொடர்பாக கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அய்யப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும் தெரிகிறது.

தனிக்குடித்தனம்

மதுகுடித்து விட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் முத்து வாழ்வில் விரக்தி அடைந்தார். தனது குழந்தையை தூக்கிக்கொண்டு திருவேங்கடத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கணவன்–மனைவி இருவரிடமும் ஊர் பெரியவர்கள் சமரசம் பேசினர். அதன்பிறகு முத்து, கணவர் மற்றும் குழந்தையுடன் திருவேங்கடத்தில் பெற்றோர் வீட்டின் அருகில் வசித்து வந்தார்.

இதற்கிடையே குழந்தை மணிராஜூக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அய்யப்பன் தனது மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு தங்கை சின்னத்தாய் வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தார். அங்கு வைத்து கணவன்–மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறின்போது ஆத்திரம் அடைந்த அய்யப்பன், மனைவி என்றும் பாராமல் கழுத்தை அறுத்து முத்துவை கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்தது.

கைது

இதனைத்தொடர்ந்து போலீசார் அய்யப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கழுத்து அறுத்து கிளி ஜோதிடர் கொலை செய்த சம்பவம் சங்கரன்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story