சாணார்பட்டி பகுதிகளில் மழை எதிரொலி: குளம், ஏரிகளுக்கு நீர்வரத்து விவசாயிகள் மகிழ்ச்சி
சாணார்பட்டி பகுதிகளில் பெய்த மழை காரணமாக குளம் ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
கோபால்பட்டி,
சாணார்பட்டி ஒன்றியத்தில் விவசாயமே முக்கிய தொழிலாக இருக்கிறது. இங்கு மா, தென்னை, கொய்யா, எலுமிச்சை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக இங்கு விளையும் மாம்பழம் பிரசித்தி பெற்றது. கடந்த ஆண்டு முறையாக பருவமழை பெய்யாததால் குளம், ஆறு, குட்டைகள் வறண்டன.
நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றது. குடிநீர் கூட கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அடிக்கடி பஞ்சாயத்து, ஒன்றிய அலுவலகங்களை பொதுமக்கள் முற்றுகையிடும் சம்பவமும் வாடிக்கையாக நடந்து வந்தது. மேலும் மா, கொய்யா, தென்னை ஆகிய மரங்கள் கருகி வந்ததால் அவை வெட்டி அழிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களாக சாணார்பட்டி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குளம், ஏரி, தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன. மேலும் பட்டுப்போன மரங்கள் துளிர் விட தொடங்கியுள்ளன. இதையொட்டி விவசாய பணிகளில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக நிலங்களை உழுது தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர வெட்டப்பட்ட தென்னை, மா மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடவு செய்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஒன்றிய பகுதிகளில் தடுப்பணைகள், குளம், ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கன்னியாபுரத்தில் சின்னாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரம்பியுள்ளது.
ஆனால் குளம், ஏரிகளுக்கு வரும் வரத்துகால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்து போய் காட்சியளிக்கிறது. இதனால் மழை தண்ணீரை முழுமையாக சேர்த்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு வரத்து கால்வாய்களை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.