தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக பாடத்திட்டம் அமைய வேண்டும்


தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக பாடத்திட்டம் அமைய வேண்டும்
x
தினத்தந்தி 10 Sept 2017 4:15 AM IST (Updated: 10 Sept 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக பாடத்திட்டம் அமைய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குறிப்பிட்டார்.

புதுச்சேரி,

புதிய பாடத்திட்டம் வடிவமைத்தல் தொடர்பான பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் புதுவை லாஸ்பேட்டை ஆசிரியர் பயிற்சி மையத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் குமார் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குமார் கலந்துகொண்டு நோக்க உரையாற்றினார். கடலூர் முதன்மை கல்வி அலுவலர் முருகன் சிறப்புரையாற்றினார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரும் பாடத்திட்ட வடிவமைப்பு குழு தலைவருமான அனந்த கிருஷ்ணன் கலந்துகொண்டு தலைமை உரையாற்றினார்.

பாடத்திட்டத்தையோ, பாடப்புத்தகங்களையோ மாற்றி அமைப்பது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல. கல்வி திட்டத்தையே மாற்றியமைப்பதுதான் எங்கள் திட்டம். அப்படி செய்வதன் மூலமே மாணவர்களின் திறனை வளர்ப்பதுடன் எந்த போட்டித்தேர்விலும் அவர்களை பங்கேற்க செய்ய முடியும்.

மாணவர்கள் மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே தவறான வழிகாட்டுதலுடன் பாடங்கள் நடத்தப்பட்டதால் பாடத்திட்டத்தின் மதிப்பு குறைந்துவிட்டது. நமது பாடத்திட்டத்தில் தவறு இல்லை. அதை நடைமுறைப்படுத்துவதில்தான் குறைகள் ஏற்பட்டது. மதிப்பெண் வாங்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் பாடங்கள் நடத்தப்பட்டதால் பாடத்திட்டத்தின் மதிப்பு குறைந்துவிட்டது.

2018–ம் ஆண்டு 1–ம் வகுப்பில் சேரும் குழந்தை 12–ம் வகுப்பு முடித்துவிட்டு வரும்போது ஏற்படும் சமூக, பொருளாதார மாற்றங்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார் செய்ய என்னென்ன செய்வது? என்று சிந்தித்து வருகிறோம். மாணவர்களின் அடிப்படை அறிவை தன்னம்பிக்கையுடன் வளர்க்கும் விதமாக பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

பாடத்திட்டத்தை மாற்றி அமைத்தால் மட்டும் போதுமானது அல்ல. மற்றைய கட்டுமானத்திற்கும் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும் நாம் சிந்திக்கவேண்டும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் மாணவர்களின் தகுதிக்கேற்ப எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்? என்று ஆலோசனை வழங்கும் அமைப்பினை உருவாக்கவேண்டும். கற்பிக்கும் முறையில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்தும் கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கவேண்டும்.

இவ்வாறு ஆனந்தகிருஷ்ணன் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. தன்ராஜ், கல்வித்துறை முன்னாள் இணை இயக்குனர் ராமதாஸ், முன்னாள் துணை இயக்குனர் ராஜசேகரன் உள்பட கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், தன்னார்வ நிறுவன கருத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

புதுவை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பாஸ்கரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சோமசுந்தரம், ரங்கநாதன், மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இணை இயக்குனர் கிருஷ்ணராஜு நன்றி கூறினார்.


Next Story