விவசாயம் நெருக்கடியை சந்திப்பதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு தான் காரணம்


விவசாயம் நெருக்கடியை சந்திப்பதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு தான் காரணம்
x
தினத்தந்தி 10 Sept 2017 3:49 AM IST (Updated: 10 Sept 2017 3:48 AM IST)
t-max-icont-min-icon

விவசாயம் நெருக்கடியை சந்திப்பதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு தான் காரணம் என்று ராகுல்காந்திக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்தார்.

மும்பை,

நாந்தெட் மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தை அக்கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அப்போது, அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசுகையில், “பாரதீய ஜனதா தலைமையிலான அரசு 50 முதல் 60 தொழில் அதிபர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது. விவசாயிகளின் நிலையை பற்றி அவர்களுக்கு துளியளவும் கவலை இல்லை” என்றார்.

மேலும், மாநில அரசு ரூ.34 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி அறிவித்தாலும், உண்மையில் ரூ.5 ஆயிரம் கோடி தான் விவசாயிகளுக்கு செல்லும் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டு குறித்து மும்பையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசால் தான் மராட்டியம் இத்தகைய வேளாண் நெருக்கடியை சந்திக்கிறது. மத்தியில் அவர்கள் 10 ஆண்டுகள் (2004-14) ஆட்சியில் இருந்தார்கள். மராட்டியத்தில் 15 ஆண்டுகள் (1999-2014) ஆட்சி செய்தார்கள். இருந்தாலும், மராட்டியம் தொடர்ந்து விவசாய நெருக்கடியை சந்திக்கிறது.

நாளைக்கே ராகுல்காந்திக்கு ரூ.5 ஆயிரம் கோடி கொடுக்கிறேன். அதை வைத்து கொண்டு அவர் பயிர்க்கடனை தள்ளுபடி செய்து காண்பிக்கட்டும். விவசாயிகளின் தற்கொலை சம்பவத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. போதுமான தண்ணீர் இருப்பை உறுதிப்படுத்த நதிகள் இணைப்பு மற்றும் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

Next Story