கவர்னருக்கு, லோக் அயுக்தா நீதிபதி கடிதம்
சொத்து கணக்கை தாக்கல் செய்யாத ஒரு எம்.எல்.ஏ., 2 மேல்–சபை உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கவர்னருக்கு, லோக் அயுக்தா நீதிபதி கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு,
சொத்து கணக்கை தாக்கல் செய்யாத ஒரு எம்.எல்.ஏ., 2 மேல்–சபை உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கவர்னர் வஜூபாய் வாலாக்கு, லோக் அயுக்தா நீதிபதி விஸ்வநாத ஷெட்டி கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், மேல்–சபை உறுப்பினர்கள் (எம்.எல்.சி.க்கள்) ஆண்டு தோறும் தங்களது சொத்து கணக்கை லோக் அயுக்தாவில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, எம்.எல்.ஏ.க்கள், மேல்–சபை உறுப்பினர்கள் தங்களது சொத்து கணக்கை லோக் அயுக்தாவில் தாக்கல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கடந்த 2015–16–ம் ஆண்டுக்கான சொத்து கணக்கை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவமூர்த்தி எம்.எல்.ஏ, மேல்–சபை உறுப்பினர்களாக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சவுடாரெட்டி, சுயேட்சையான மல்லிகார்ஜூன் ஆகிய 3 பேரும் லோக் அயுக்தாவில் தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு, லோக் அயுக்தா நீதிபதி விஸ்வநாத ஷெட்டி ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், ‘லோக் அயுக்தா அமைப்பின் விதிமுறைகள்படி எம்.எல்.ஏ.க்கள், மேல்–சபை உறுப்பினர்கள் தங்களது சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவமூர்த்தி எம்.எல்.ஏ, மேல்–சபை உறுப்பினர்களான சவுடாரெட்டி, மல்லிகார்ஜூன் ஆகியோர் தங்களது சொத்து கணக்கை தாக்கல் செய்யாமல் உள்ளனர். எனவே அவர்கள் 3 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.