சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதை நம்முடைய கடமையாக நினைக்க வேண்டும்
‘சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதை நம்முடைய கடமையாக நினைக்க வேண்டும்’ என்று மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி சக்தி அம்மா பேசினார்.
வேலூர்,
சமுதாயத்தில் வாழ்கின்ற மக்களுக்கு நல்ல விஷயங்களை போதிப்பதற்காக ஒவ்வொரு சமுதாயத்திலும் நிறைய பழமொழிகள் சொல்வது உண்டு. அந்த பழமொழியின் ஒன்று தானமும், தர்மமும் தனக்கு மிஞ்சிய பிறகு தான். இந்த பழமொழியை எல்லோரும் சொல்வார்கள். நமக்கு போதும், போதும் என்கிற அளவுக்கு சேர்ந்த பிறகு தான் தானம் செய்ய வேண்டுமா? அப்படி இல்லை. இவ்வாறு இருந்தால் ஒருத்தரும் தானம் செய்ய முடியாது. என்றைக்கு போதும் என்கிற மனம் வரும். ஒவ்வொருவருக்கும் அவரவர்களுடைய சக்திக்கு ஏற்றவாறு தேவை இருந்து கொண்டே தான் இருக்கும். சமுதாயத்தில் அனைவருக்கும் கடமை உள்ளது. எப்படி இருந்தாலும் அதனை பூர்த்தி செய்ய வேண்டும் என நினைப்பார்கள். எப்படிப்பட்ட பிரச்சினைகளிலும் கடமையை செய்ய தவறுவதில்லை. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தங்களுடைய சக்திக்கு ஏற்றவாறு செய்து விடுவார்கள்.
கடமை இல்லை என்று நினைத்து விட்டால் எதுவும் செய்ய முடியாது. உதவி செய்வதை நமது கடமையாக நினைக்க வேண்டும். நல்லது செய்ய பணம், பதவி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நல்லது செய்ய மனது இருந்தால் போதும். அவர்கள் யாராக இருந்தாலும் சரி. அவர்களால் சமுதாயத்துக்கு நல்லது செய்ய முடியும்.
குழந்தைகளுக்கு இயற்கையாகவே நல்ல குணங்கள் இருக்கும். அவர்கள் சிறு வயதிலேயே தர்மம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் செய்யும் தர்மத்தை தடுக்கும் முதல் இடமே நமது வீடுதான். வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களுக்கு நல்லது செய்ய சொல்லி கொடுக்க வேண்டும். நம்மால் என்ன முடிகிறதோ அதை செய்வதுதான் தர்மம். நல்லதை எல்லோராலும் செய்ய முடியும். இளைய சமுதாயத்தினர் தங்களுக்கு கிடைக்கும் கல்வி, அறிவை சந்தோஷத்திற்காக மட்டுமல்லாமல், கஷ்டப்படுகிறவர்கள் பயன்படும் வகையில் செயல்படுத்த வேண்டும்.மனிதனால் தான் நல்லது செய்ய முடியும். தன்னை சமுதாயத்துக்கு அர்ப்பணித்தவர்கள் சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள். அத்தனை மாணவ–மாணவிகளும் படிப்பின் அருமையை உணர்ந்து நன்றாக படித்து நல்ல நிலைக்கு உயர வேண்டும். நீங்கள் 10 பேருக்கு வழிகாட்டியாக, முன்னுதாரனமாக திகழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மத்திய மந்திரி விஜயசம்ப்லா பேசுகையில், குழந்தைகளுக்கு நிறைய திறமைகள் இருக்கும். அவர்களுடைய திறமையை, ஆர்வத்தை தனது ஞானதிருஷ்டியால் சக்தி அம்மா வெளிப்படுத்தி உதவி செய்து வருவது பெருமையாக உள்ளது. ‘‘வித்யாநேத்ரம்’’ திட்டத்தின் கீழ் மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருவது பாராட்டுக்குரியது. இதனை பயன்படுத்தி நீங்களும் வாழ்க்கையில் உயர்ந்து மற்றவர்களுக்கு உதவி செய்து ஒளிமயமாக வாழ வேண்டும்.சக்தி அம்மா எந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறாரோ, அதே பாதையில் தான் நாங்களும் சென்று கொண்டிருக்கிறோம். மனநிலை பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை, கருவிகளை வழங்கி வருகிறோம். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்காக பிரதமர் நரேந்திரமோடி பல நலத்திட்டங்களை உருவாக்கி உள்ளார். அதன்மூலம் கிராமப்புற வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேறலாம். வருகிற 2022–ம் ஆண்டுக்குள் நமது நாடு ‘தூய்மையான பாரதம், ஏழ்மையில்லாத பாரதம், தீவிரவாதம் இல்லாத பாரதம்’ உருவாக வேண்டும் என்று பிரதமர் மோடி உறுதி எடுத்துள்ளார். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கலையரசன், தமிழக அரசின் முதன்மை செயலாளர் டி.எஸ்.ஜவகர் ஆகியோர் பேசினர்.
இதில் டெல்லியை சேர்ந்த சத்ய பூஷன் ஜெயின், நாராயணி பீடம் அறங்காவலர் சவுந்தரராஜன், ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ், மேலாளர் சம்பத், மாணவ–மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை கவிஞர் ஞானசேகரன் தொகுத்து வழங்கினார்.