நிறைவேறாத ஆசைகளை திணிக்க வேண்டாம்


நிறைவேறாத ஆசைகளை திணிக்க வேண்டாம்
x
தினத்தந்தி 10 Sept 2017 12:36 PM IST (Updated: 10 Sept 2017 12:35 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை பருவத்துக்கும், இளமை பருவத்துக்கும் இடைப்பட்ட குறுகிய காலகட்டம், ‘டீன் ஏஜ்’ பருவம். இந்த பருவத்தில் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையே ஏற்படும் நெருக்கம்தான் உறவு பந்தத்தை வலுப்படுத்தும்.

குழந்தை பருவத்துக்கும், இளமை பருவத்துக்கும் இடைப்பட்ட குறுகிய காலகட்டம், ‘டீன் ஏஜ்’ பருவம். இந்த பருவத்தில் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையே ஏற்படும் நெருக்கம்தான் உறவு பந்தத்தை வலுப்படுத்தும். பிள்ளைகள் வளர்ந்து ஆளான பிறகும் பெற்றோருடன் இடைவெளியின்றி வாழ்க்கை பயணத்தை தொடர இந்த பந்தம் வழிவகுக்கும்.

பெரும்பாலான பெற்றோர் மழலை பருவத்தில் குழந்தைகளிடம் காட்டும் பாசத்தை அவர்கள் வளர்ந்து ஆளாகும் சமயங்களில் காட்டுவதில்லை. அதிலும் டீன் ஏஜ் பருவத்தில் பிள்ளைகளிடம் அதிகம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை அமைத்து கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். பிள்ளைகள் பேசுவதை காதுகொடுத்து கேட்கும் மனநிலையிலும் இல்லாமல் போய்விடுகிறார்கள். அதுவே இருவருக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது.

பிள்ளைகள் வீட்டில் இருக்கும் சமயங்களில் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகளை பெற்றோர் உருவாக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளை உடன் சேர்ந்து விளையாடுங்கள். அது அவர்களுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமையும். பெற்றோருடன் சேர்ந்து பொழுதை கழித்த மனநிறைவையும் கொடுக்கும். அதுபோல் விடுமுறை நாட்களில் பிள்ளைகளுடன் சேர்ந்து வெளி இடங்களுக்கு செல்வதற்கான சந்தர்ப்பங்களை பெற்றோர் ஏற் படுத்திக்கொள்ள வேண்டும்.

டீன் ஏஜ் பருவத்தில் பெற்றோரை விட நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பெற்றோர்-பிள்ளைகளுக்கான இடைவெளியே முக்கிய காரணம். அதனை பெற்றோர் புரிந்துகொண்டு பிள்ளைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நல்ல நண்பர்களை தேர்ந் தெடுத்து பழகவும் பிள்ளைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். அதேவேளையில் அவர்களை கண்காணிக் கவும் வேண்டும்.

பிள்ளைகள் கோபத்துடன் நடந்து கொள்ளும் சமயங்களில் பொறுமையை கடைப் பிடிக்க வேண்டும். அவர்களிடத்தில் போதுமான மனப்பக்குவமோ, அனுபவ அறிவோ, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் சுபாவமோ இருக்காது. சில சமயங்களில் காரணமே இல்லாமல் கோபப்படுவார்கள். சம்பந்தமே இல்லாமல் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். திடீரென்று சோர்வான மனநிலையில் காணப்படுவார்கள். அந்த சமயங்களில் பெற்றோர், நெருங்கிய நண்பர்களை போல் பழகவேண்டும். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்தி செல்ல வேண்டும். பெற்றோர் பெருமைப்படும் அளவுக்கு பிள்ளையிடம் நிச்சயமாக சில நல்ல விஷயங்கள் இருக்கும். அவைகளை கண்டறிந்து பாராட்ட வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போதும் பிள்ளைகளிடம் வெளிப்படும் நல்ல விஷயங்களை சுட்டிக்காட்டி பேச வேண்டும். ஒருபோதும் பிள்ளைகளின் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் பேசுவதோ, திட்டுவதோ கூடாது.

டீன் ஏஜ் வயதில் சமூக தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதில் ஆர்வமாக இருப்பார்கள். அதனால் சில தவறுகளும் நடக்கலாம். அதுபோன்ற சூழலில் பின்விளைவுகளை எடுத்துக்கூறி அவர்களை வழிநடத்தி செல்ல வேண்டும். அவற்றில் இருந்து அறவே ஒதுங்கி இருக்குமாறு கடுமை காட்டக்கூடாது. அதிலிருக்கும் நல்ல விஷயங்களை பயன்படுத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இந்த பருவத்திற்கே உரித்தான இனக்கவர்ச்சி சார்ந்த பிரச்சினைகளை எப்படி கையாள வேண்டும் என்பதையும் சொல்லி புரிய வைக்க வேண்டும். பாலியல் சார்ந்த தவறான செய்திகளை நண்பர்களிடம் இருந்தோ, சமூக தொடர்பு சாதனங்கள் மூலமோ தெரிந்து கொள்வதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. அதனால் அவர்கள் கேட்காமலேயே, பாலியல் பற்றிய தெளிவான புரிதலை பெற்றோர் விளக்கி கூற வேண்டும். அதில் ஏற்படும் சந்தேகங்களை தயக்கமின்றி கேட்குமாறு கூறுவதோடு அவர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை சொல்ல வேண்டும்.

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும். அதற்கான அங்கீகாரம் கிடைக்காத சூழலில் வளருபவர்கள் விரக்தியின் விளிம்பில் இருப்பார்கள். அவர்களை சாதுரியமாக கையாண்டு அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். ஒருபோதும் பெற்றோர் தங்கள் நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது. அவர்களின் விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். அதன்மூலம் அவர்களிடத்தில் தாழ்வு மனப்பான்மை வெளிப்படாமல் பார்த்துக்கொள்ள இயலும்.

Next Story