புரவிபாளையத்தில் இரவு நேரங்களில் நிறுத்தக்கோரி 2 அரசு பஸ்களை சிறைபிடித்த பொதுமக்கள்
வெள்ளித்திருப்பூர் அருகே புரவிபாளையத்தில் இரவு நேரங்களில் நிறுத்தக்கோரி 2 அரசு பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தியூர்,
வெள்ளித்திருப்பூர் அருகே புரவிபாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு அந்தியூர் மற்றும் பவானியில் இருந்து வெள்ளித்திருப்பூர் வழியாக தினமும் 2 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் அந்தியூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் புரவிபாளையத்துக்கு நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.
புரவிபாளையம் அருகே சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 60–க்கும் மேற்பட்டோர் திடீரென ரோட்டின் முன்பு திரண்டு பஸ்சை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தார்கள். இதனால் டிரைவர், கண்டக்டர், பயணிகள் கீழே இறங்கினார்கள். அதேபோல் இரவு 7 மணி அளவில் அந்த வழியாக புரவிபாளையத்துக்கு சென்று கொண்டிருந்த மற்றொரு பஸ்சையும் பொதுமக்கள் சிறைபிடித்தார்கள்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வெள்ளித்திருப்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசாரும் டிரைவர்களும், கண்டக்டர்களும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘பவானி, அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் வழியாக புரவிபாளையத்துக்கு தினமும் 2 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் பகல் நேரங்களில் மட்டும் புரவிபாளையம் வரை வந்து செல்கிறது. இரவு நேரங்களில் 9, 10 மணிக்கு மேல் பஸ்கள் புரவிபாளையத்துக்குள் வருவதில்லை.
வெள்ளித்திருப்பூரிலேயே ஆட்களை இறங்கிவிடுகிறார்கள். இதனால் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று ஊர் திரும்புபவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. அங்கிருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள புரவிபாளையத்துக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசு அனுமதி அளித்தும் ஏன் நிறுத்தாமல் செல்கிறீர்கள்? எனவே 2 அரசு டவுன் பஸ்களும் இரவு நேரங்களிலும் புரவிபாளையம் வரை வந்து செல்ல வேண்டும்’ என்றனர்.
இதற்கு டிரைவர்களும், கண்டக்டர்களும் கூறும்போது, ‘இரவு நேரங்களில் புரவிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மட்டும் பஸ்சில் பயணிக்கின்றனர். இதனால் தான் வெள்ளித்திருப்பூரிலேயே அவர்களை இறக்கி விட்டுவிடுகிறோம். இனிமேல் இரவு நேரங்களிலும் புரவிபாளையம் வரை பஸ்களை இயக்குகிறோம்’ என்றனர்.
அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சிறைபிடித்த 2 பஸ்களையும் விடுவித்து இரவு 8 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.