வெள்ளகோவில் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த பெண் எரித்துக்கொலை
வெள்ளகோவில் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் நூற்பாலை தொழிலாளியை போலீசார் தேடிவருகிறார்கள்.
வெள்ளகோவில்,
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சங்கீதா (வயது 30). இவர்கள் இருவரும் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். இதுபோல் மூலனூரை சேர்ந்தவர் மதியழகன். இவர் நூற்பாலை ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூலனூரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது சங்கீதாவுக்கும், மதியழகனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்தனர். சங்கீதா நட்பு ரீதியாக பேசியதை மதியழகன் தவறாக புரிந்து கொண்டதாக தெரிகிறது. இதற்கிடையில் மதியழகன் அந்த பெண்ணின் செல்போனில் தொடர்புகொண்டு நாம் இருவரும் சந்தோஷமாக இருக்கலாம் வா என்று அழைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சங்கீதா அதன்பின்னர் மதியழகனுடன் பேசுவதை தவிர்த்தார். இருப்பினும் மதியழகன் விடாமல் அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வெள்ளகோவில் போலீசில் சங்கீதா புகார் செய்தார். எனவே போலீசார் மதியழகனை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்.
இதனால் சங்கீதா மீது மதியழகன் கோபத்தில் இருந்து வந்தார். அத்துடன் அவரை பழி தீர்க்கவும் முடிவுசெய்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பாட்டிலில் மண்எண்ணெய் எடுத்துக்கொண்டு தீத்தாம்பாளையத்திற்கு மதியழகன் சென்றார். அப்போது அங்குள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருந்த சங்கீதாவை பார்த்ததும், அவரை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியதாக தெரிகிறது.
அத்துடன் நீ அழகாய் இருப்பதால் தானே இப்படி கிராக்கி பண்ணுகிறாய் என்று கூறியதுடன் கையில் வைத்திருந்த மண்எண்ணெயை சங்கீதா உடலில் ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகிறது. இதில் சங்கீதா பலத்த காயம் அடைந்தார். பின்னர் மதியழகன் அங்கிருந்து தப்பிஓடி தலைமறைவானார். ஆபத்தான நிலையில் இருந்த சங்கீதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை சங்கீதா பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன், சப்–இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் விசாரணை நடத்தி மதியழகன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை தேடிவருகிறார்கள்.