தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும்: நத்தம் விசுவநாதன் பேட்டி
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று பழனியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.
பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:–
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ஆட்சி முடங்கி கிடக்கிறது என்று கூறி வருகிறார். இவ்வாறு விமர்சனங்கள் செய்வதுதானா எதிர்கட்சியின் கடமை. நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக இவ்வாறு கூறிவருகிறார்.
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதை அவரே ஒத்துக்கொள்வது போல் இருக்கிறது. இதனால் தான் அ.தி.மு.க.வில் இருந்து வருபவர்களை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள் என்றுமே எம்.ஜி.ஆர். வழியை பின்பற்றுவார்கள். ஒருபோதும் தி.மு.க.வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் என்று சொல்லி கொண்டு செயல்படாத தலைவராக இருக்கிறார். விஜயகாந்த் ஆட்சியை பிடிப்பார் என்று பிரேமலதா கூறுவது இன்றைய சிறந்த நகைச்சுவையாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவதற்கு காரணம் நீதிமன்றம் மற்றும் தி.மு.க. தான். விரைவில் உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. நடத்தும்.
நடிகர் கமல்ஹாசன் அ.தி.மு.க. ஆட்சியை விமர்சனம் செய்து வருகிறார். இது அவருடைய கருத்து. இதற்கு மறுப்பு சொல்லும் உரிமை எங்களிடம் உள்ளது. நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. இதனால் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. பள்ளி மாணவ, மாணவிகளும் நீட் தேர்வுக்காக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களின் உணர்வுகளை மாநில அரசு மதிக்கிறது. மாநில அரசின் கோரிக்கையும் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான்.
இவ்வாறு நத்தம் விசுவநாதன் கூறினார்.