நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Sept 2017 4:45 AM IST (Updated: 11 Sept 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தில் தந்தை பெரியார் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். ஆனால் வகுப்பறைக்கு செல்லாமல் பள்ளியின் நுழைவு வாயிலில் அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து மாணவர்கள் கூறியதாவது:-

சி.பி.எஸ்.இ. முறை கல்வியை தொடக்க நிலையிலிருந்தே படித்திருந்தால் மட்டுமே நீட் போன்ற தேர்வுகளில் அதிகளவிலான மதிப்பெண்களை பெற்று மருத்துவக்கல்விக்கு செல்ல முடியும் என்ற நிலை தற்போது உள்ளது. புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு 6 ஆண்டுகளே ஆகிறது.

தற்போது மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களால் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றும் அதிக மதிப்பெண்களை பெற முடியவில்லை. எனவே பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும். அதுவரை நீட் போன்ற தேர்வுகளை மாணவர்களிடம் திணிக்கக்கூடாது. இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் காரைக்கால் டவுன் போலீசார் விரைந்து வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது நீட் தேர்வு சம்பந்தமாக போராட்டங்கள் நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை எடுத்துக் கூறி அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். 

Next Story