அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் பந்தயம்


அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் பந்தயம்
x
தினத்தந்தி 11 Sept 2017 3:45 AM IST (Updated: 11 Sept 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் பந்தயம் புதுக்கோட்டையில் 17-ந் தேதி நடைபெற உள்ளது என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை மாவட்ட பிரிவு மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மிதிவண்டி கழகம் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அண்ணா விரைவு சைக்கிள் பந்தயம் வருகிற 17-ந் தேதி காலை 7 மணியளவில் புதுக்கோட்டை மச்சுவாடி அண்டகுளம் சாலையில் தஞ்சாவூர் சாலை பிரியும்் இடத்தில் இருந்து தொடங்க உள்ளது.

இந்த பந்தயம் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் (1.7.2004-ந் தேதி அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள்), 15 வயதுக்கு உட்பட்டவர்கள் (1.7.2002-ந் தேதி அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள்), 17 வயதுக்கு உட்பட்டவர்கள் (1.7.2000-ந் தேதி அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள்) ஆகிய பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே நடைபெற உள்ளது. இதில் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 15 மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும் பந்தய இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதைப்போல மாணவிகள் பிரிவில் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் பந்தய இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து வயது சான்றிதழ் பெற்று வருகிற 17-ந் தேதி காலை 6.30 மணிக்கு போட்டிகள் நடைபெறும் அண்டகுளம் பிரிவு சாலைக்கு வந்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த செலவில் சைக்கிள்களை கொண்டுவர வேண்டும். இந்தியாவில் தயாரான சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட சைக்கிளை பயன்படுத்த கூடாது.

சாதாரண கைப்பிடி கொண்ட சைக்கிளாக இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வயது சான்றுடன் வரவேண்டும். சைக்கிள்பந்தயத்தில் நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கோ அல்லது விபத்தில் விளையும் தனிப்பட்ட இழப்புகளுக்கோ பங்கு பெறும் மாணவ, மாணவிகளே பொறுப்பேற்க வேண்டும் என ஒப்புதல் அளிக்க வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ள நுழைவு கட்டணம் இல்லை. போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும். வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Related Tags :
Next Story