ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் தேரோட்டம்


ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 11 Sept 2017 4:00 AM IST (Updated: 11 Sept 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் ஆவணி கடைசி ஞாயிற்றுக் கிழமையையொட்டி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன்கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு சொந்தமான இந்த கோவிலில் ஆவணி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு ஆவணி பெருவிழா கடந்த மாதம் 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து முத்துப்பல்லக்கு வீதிஉலா மற்றும் பல்வேறு வாகனங்களில் அம்மன் புறப்பாடு தொடர்ந்து நடைபெற்று வந்தன. மேலும் ஒவ்வொரு ஆவணி ஞாயிற்றுக்கிழமை அன்றும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டம்

ஆவணி கடைசி ஞாயிற்றுக் கிழமையையொட்டி நேற்று அம்மன் ரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். ஆவணி கடைசி ஞாயிற்றுக் கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. மாலையில் கோவிலில் இருந்து அம்மன் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை சுற்றி உள்ள 4 வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.

இதில் அமைச்சர் காமராஜ், தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் சுரேஷ், தமிழ்ச்செல்வி, ரெங்கராஜன், செந்தில் மற்றும் சிங்கவளநாடு கிராமமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நாளை(செவ்வாய்க்கிழமை) விடையாற்றி விழா நடக்கிறது. வருகிற 17-ந் தேதி தெப்பத்திருவிழாவும், 19-ந் தேதி தெப்ப விடையாற்றி விழாவும் நடக்கிறது. 

Next Story