கிராம வளர்ச்சி அதிகாரிகள் 3 பேர் பணி இடைநீக்கம்
பணியில் அலட்சியமாக செயல்பட்ட கிராம வளர்ச்சி அதிகாரிகள் 3 பேரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஹாசன்,
பணியில் அலட்சியமாக செயல்பட்ட கிராம வளர்ச்சி அதிகாரிகள் 3 பேரை பணி இடைநீக்கம் செய்து ஹாசன் மாவட்ட செயல் அதிகாரி ஜானகி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.
ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டனா தாலுகா பெக்கா கிராம பஞ்சயாத்து வளர்ச்சி அதிகாரியாக சிவக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகளை முறையாக மேற்கொள்வில்லை எனவும், பணிக்கு தினமும் சரியாக வருவதில்லை எனவும் புகார்கள் எழுந்தன. இதுபற்றி நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் ஹாசன் மாவட்ட செயல் அதிகாரி ஜானகிக்கு புகார் அளித்தனர்.
இதேபோல் அரிசிகெரே தாலுகா ஜாவ்கால் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி விருபாட்ஷா, சென்னராயப்பட்டணா தாலுகா அக்கனஹள்ளி கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி மஞ்சுநாத் ஆகியோரும் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக புகார்கள் வந்தன.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த மாவட்ட செயல் அதிகாரி ஜானகி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட செயல் அதிகாரி ஜானகியிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட செயல் அதிகாரி ஜானகி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில் பணியில் அலட்சியமாக செயல்பட்ட ஜாவ்கல் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி விருபாட்ஷா, அக்கனஹள்ளி கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி மஞ்சுநாத், பெக்கா கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சிவக்குமார் ஆகிய 3 பேரை பணி இடை நீக்கம் செய்வது உத்தரவிட்டு இருந்தார்.