சமுதாயத்தில் கடைகோடி மனிதனுக்கும் கல்வி கிடைக்க வேண்டும்


சமுதாயத்தில் கடைகோடி மனிதனுக்கும் கல்வி கிடைக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Sept 2017 5:11 AM IST (Updated: 11 Sept 2017 5:11 AM IST)
t-max-icont-min-icon

சமுதாயத்தில் கடைகோடி மனிதனுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று கவர்னர் வஜூபாய் வாலா கூறினார்.

பெங்களூரு,

துமகூருவில் சித்தகங்கா மடம் சார்பில் ஒரு ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆஸ்பத்திரி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு ஆஸ்பத்திரியை தொடங்கி வைத்து பேசியதாவது:–

நாட்டில் ஞானமின்மை நீங்காதவரை ஏழ்மையை ஒழிக்க முடியாது. அதனால் சமுதாயத்தில் கடைகோடி மனிதனுக்கும் கல்வி கிடைக்க வேண்டும். இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சித்தகங்கா மடாதிபதி கல்வி, சுகாதாரத்துடன் ஞானத்தையும் இந்த சமுதாயத்திற்கு கொடையாக வழங்குகிறார். இளைஞர் சக்தியை பயன்படுத்தினால் நாடு முன்னேற்றம் அடையும். இளம் சமுதாயம் திசை மாறினால் நாட்டுக்கு இழப்பு தான் ஏற்படும். நேர்மையான, உண்மையான மடாதிபதிகளின் வழியை நாம் பின்பற்றி நல்ல வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

இந்திய கலாசார ஞானத்தை கொடையாக கொடுப்பது மடாதிபதிகள். நேர்மையாக இருக்கும் மடாதிபதிகள் சிறப்பான சமுதாய பணிகளை மேற்கொள்கிறார்கள். மத போதனையுடன் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட இதர வசதிகளை சித்தகங்கா மடாதிபதி ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறார். அவர் எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் இந்த பணிகளை அவர் செய்து வருகிறார். அவருடைய இந்த பணிகள் மிகவும் பாராட்டக்கூடியவை ஆகும்.

கல்வி, சுகாதார சேவைகளை அரசுகள் செய்கிறது. ஆனால் இத்தகைய சேவைகளை மடாதிபதிகளும் செய்வதை தென்இந்தியாவில் அதிகம் பார்க்க முடிகிறது. சித்தகங்கா மடாதிபதி இப்போது ஆஸ்பத்திரி கட்டி மருத்துவ சேவையை தொடங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு கவர்னர் வஜூபாய் வாலா பேசினார்.

இதில் சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசுவாமி, மந்திரிகள் எம்.பி.பட்டீல், ஜெயச்சந்திரா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story