கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம், காத்திருப்பு போராட்டம் என 3 கட்டங்களாக போராட்டத்தை அறிவித்தனர்.
சிவகங்கை,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைந்து புதிய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம், காத்திருப்பு போராட்டம் என 3 கட்டங்களாக போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி நேற்று முதற்கட்டமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் சிவகங்கையில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், இளங்கோ, தமிழரசன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்பாட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பாண்டி உள்பட ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சத்தணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். 2–ம் கட்டமாக இன்று(புதன்கிழமை) கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.