கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டகலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மதுரை,
ஜாக்டோ– ஜியோ அமைப்பைசேர்ந்த ஆசிரியர்கள், அரசுஊழியர்கள் கடந்த 7–ந்தேதிமுதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் ஜாக்டோ– ஜியோஅமைப்பில் பிளவு ஏற்பட்டது.
இந்தநிலையில் போராட்டத்திற்கு மதுரை ஜகோர்ட்டு கோர்ட்டு தடை விதித்தது. பணிக்கு திரும்ப வேண்டும் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கையும் அனுப்பினார். ஆனாலும் 17 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று காலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடினார்கள். அங்கு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மறியலும், நாளை (புதன்கிழமை) காத்திருப்பு போராட்டமும் நடத்தப்படும் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.