ஊட்டி, கூடலூர் பகுதிகளில் 3–வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊட்டி, கூடலூர் பகுதிகளில் 3–வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில், 3–வது நாளாக வேலைநிறுத்தம் செய்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.
வருவாய்த்துறை சங்க மாவட்ட தலைவர் குமாரராஜா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 20 சதவீத இடைக்கால நிவாரணத்தை கடந்த 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்ப்பட்டது. இதில் ஜெயசீலன் (ஜாக்டோ), ஆஸ்ரா (ஜியோ) உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் நேற்று 3–வது நாளாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் நேற்று வேலைக்கு வராவிட்டாலும் வழக்கம் போல பள்ளிகள் இயங்கின. பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், பள்ளியை கவனித்து கொண்டனர். நேற்று காலாண்டு தேர்வு தொடங்கியதால் தேர்வு பணிகளை தற்காலிக ஆசிரியர்கள் பார்த்து கொண்டனர்.
அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு சான்றுகள் வாங்குவதற்காக அரசு அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பின்னர் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கூடலூர் தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த கருணாநிதி, சலீம், அன்பழகன், அருண்குமார், சந்திரபோஸ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.