முல்லைப்பெரியாறு அணையில் தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு


முல்லைப்பெரியாறு அணையில் தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Sept 2017 4:45 AM IST (Updated: 12 Sept 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர்.

குமுளி,

தமிழக– கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு முக்கிய நீராதாரமாக திகழ்கிறது. முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு சார்பிலும், பாதுகாப்பு பணிகள் கேரள அரசு சார்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி முல்லைப்பெரியாறு அணையில் ஒரு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அணை பாதுகாப்பு பணியில் கேரள போலீசார் முறையாக ஈடுபடுவதில்லை என்றும், அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் தமிழக சார்பில் கடந்த 2014–ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. எனவே அணையில் தேசிய பாதுகாப்பு படையினரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

அதன்படி தேசிய பாதுகாப்பு படை குழுவினர் அவ்வப்போது முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி அணையில் ஆய்வு செய்வதற்காக தேசிய பாதுகாப்பு படையினர் நேற்று தேக்கடி ஏரிக்கு வந்தனர். பின்னர் படகு மூலம் முல்லைப்பெரியாறு அணைக்கு சென்றனர்.

தேசிய பாதுகாப்பு படை கமான்டோ தாமஸ் டி.ஜான், கேப்டன் அனுப்புசிங்குலாம் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் அணை பகுதி மற்றும் மதகுகளில் ஆய்வு செய்தனர். மேலும் அணையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தனர். சுமார் ஒரு மணி நேர ஆய்வுக்கு பின்னர் அவர்கள் படகு மூலம் தேக்கடி ஏரிக்கு புறப்பட்டு சென்றனர். இது வழக்கமான ஆய்வு தான் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் ஜார்ஜ்டேனியல், தமிழக பொதுப்பணித்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் சாம்இர்வின் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story