கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த 7–ந்தேதி தொடங்கினர்.
அதன்படி நேற்றும் தேனி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 5,517 அரசு ஊழியர்களில் 1,797 பேரும், 6,540 ஆசிரியர்களில் 586 பேரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார். ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்து கோஷங்கள் எழுப்பினர். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.