சென்னையில், 27-ந் தேதிக்குள் சி.பா.ஆதித்தனாரின் சிலையை நிறுவ வேண்டும் ஜி.கே.மணி பேட்டி


சென்னையில், 27-ந் தேதிக்குள் சி.பா.ஆதித்தனாரின் சிலையை நிறுவ வேண்டும் ஜி.கே.மணி பேட்டி
x
தினத்தந்தி 12 Sept 2017 4:30 AM IST (Updated: 12 Sept 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில், 27-ந் தேதிக்குள் சி.பா.ஆதித்தனாரின் சிலையை நிறுவ வேண்டும் என்று ஜி.கே.மணி தெரிவித்தார்.

குத்தாலம்,

மயிலாடுதுறையில், நாகை மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு வருகிற 17-ந் தேதி விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில் சமூகநீதி மாநாடு நடைபெற உள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு பங்களிப்பு முறையாக கிடைக்க வேண்டும் என்று இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளது. இந்த மாநாடு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள காவிரி ஆறு வறண்டு வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் 75 கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. தினமும் கர்நாடக அணைகளில் இருந்து 8 ஆயிரம் கனஅடியும், தமிழக எல்லைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 26 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேருகிறது.

காவிரி நடுவர் மன்றம்

கர்நாடகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. எனவே, மத்திய அரசு தலையிட்டு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஒவ்வொரு மாதமும் நமக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஜூன் மாதம் 10 டி.எம்.சி., ஜூலை மாதம் 34 டி.எம்.சி., ஆகஸ்டு மாதம் 50 டி.எம்.சி., செப்டம்பர் மாதம் 40 டி.எம்.சி. என்ற அளவில் தண்ணீர் வழங்கி இருக்க வேண்டும். எனவே, வழங்கப்படாமல் உள்ள இந்த தண்ணீரை உடனே காவிரி ஆற்றில் திறந்துவிட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை சேமிக்கும் வகையில் கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றில் தடுப்பணைகள் உடனே கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமையில் ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டது. தடுப்பணை கட்டப்படாவிட்டால் பொதுமக்கள் பங்களிப்புடன் பா.ம.க. சார்பில் தடுப்பணை கட்டுப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோலிய ரசாயன மண்டலம்

மத்திய-மாநில அரசுகள் நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் 57 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி பெட்ரோலிய ரசாயன மண்டலம் உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்தால் விளைநிலங்கள் பாழாகிவிடும். அங்கு வசிக்கும் மக்கள் அகதிகளாக இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இந்த திட்டத்தை மத்திய-மாநில அரசுகள் கைவிட வேண்டும். இதுபோல மக்களுக்கு எதிராக நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் மற்றும் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது.

சி.பா.ஆதித்தனார் சிலை

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் சிலை நிறுவப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போக்குவரத்தை சீரமைப்பதற்காக தற்காலிகமாக அகற்றுவதாக கூறி அவரது சிலை அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த சிலை தற்போதுவரை அங்கு நிறுவப்படவில்லை. தமிழ் பற்றும், நாட்டு பற்றும் கொண்டவர் சி.பா.ஆதித்தனார். தினத்தந்தி நாளிதழை தொடங்கி, அதன் மூலம் பாமர மக்களும் செய்திகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் மக்களுக்கு அமைத்து கொடுத்தவர். வருகிற 27-ந் தேதி சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்த நாளில் அனைத்து கட்சி தலைவர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். எனவே, தமிழ் பற்றும், நாட்டு பற்றும் கொண்ட சி.பா.ஆதித்தனாரின் சிலையை அவரது பிறந்த நாளுக்கு முன்பே நிறுவப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் பு.தா.அருள்மொழி, மாநில பொதுச் செயலாளர் பழனிசாமி, மாநில துணை தலைவர் தங்க.அய்யாசாமி, முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் அய்யப்பன், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் முத்துக்குமார், மாவட்ட தலைவர் காசி பாஸ்கரன், மாவட்ட செயலாளர்கள் அன்பழகன், ராஜ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Next Story