விவசாயத்திற்கு படிப்படியாக தண்ணீர் திறந்து விடுவோம் சித்தராமையா பேட்டி
மாநிலம் முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கிறது என்றும், தேவைப்பட்டால் விவசாயத்திற்கு படிப்படியாக தண்ணீர் திறந்து விடுவோம் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
மைசூரு,
முதல்-மந்திரி சித்தராமையா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் மைசூருவுக்கு வந்தார். தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பின்னர் மைசூரு டவுன் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்தார். பின்னர் தன்னுடைய பழைய நண்பர்களை சந்தித்து அவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தார்.
மாலையில் மைசூரு மாவட்ட கலெக்டர் ரன்தீப் மற்றும் தசரா விழா அதிகாரிகளை அழைத்து தசரா விழா தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் தசரா விழாவுக்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு சித்தராமையா உத்தரவிட்டார். பின்னர் ‘ஜனதா தரிசனம்’ எனும் மக்கள் குறைகேட்பு முகாமை நடத்தினார். அப்போது ஏராளமான பொதுமக்களிடம் இருந்து அவர் கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தண்ணீர் திறந்து விடுவோம்
பின்னர் நேற்று காலையில் முதல்-மந்திரி சித்தராமையா தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி இன்று(அதாவது நேற்று) காலையில் தொலைக்காட்சியில் தோன்றி பேசினாராம். நான் அதை பார்க்கவில்லை. அவர் தொலைக்காட்சியில் தோன்றி பேச உள்ளதாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை. இல்லையென்றால் கண்டிப்பாக நான் தொலைக்காட்சியை பார்த்திருப்பேன்.
இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் எதிர்பார்த்த அளவு மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பிரச்சினை இருக்காது. மாநிலத்தில் எதற்கும் குறைவில்லை. விவசாயிகள் என்ன கேட்டாலும் அதை கொடுக்க மாநில அரசு தயாராக உள்ளது. மாநிலம் முழுவதும் மழை பெய்து கொண்டிருப்பதால் கால்வாய்கள் மூலமாக தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தி உள்ளோம். தேவைப்பட்டால் விவசாயத்திற்கு படிப்படியாக தண்ணீர் திறந்து விடுவோம்.
6 மாதங்களுக்கு ஒருமுறை...
பெங்களூரு நகரில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அறியவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் மந்திரி கே.ஜே.ஜார்ஜும், மேயர் பத்மாவதியும் இரவு, பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மழைச்சேதம் தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும். மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துகிறது. ஆனால் மாநில அரசு 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி வருகிறது. அதனால் 6-வது ஊதியக்குழுவை அமல்படுத்தும் திட்டம் தற்போது கிடையாது.
கண்டிக்கத்தக்கது
போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்படும் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறிவருகிறார்கள். அவரை பதவி விலகச்சொல்ல பா.ஜனதாவினருக்கு தகுதி இல்லை. மத்திய மந்திரிகள் பலரும் ஊழலில் ஈடுபட்டு வருகிறார்கள். முதலில் அவர்களை பதவியில் இருந்து பா.ஜனதா விலக்கட்டும். அதன்பிறகு மந்திரி கே.ஜே.ஜார்ஜை பதவி விலக சொல்லட்டும்.
பெங்களூரு மேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) கட்சி கேட்டுள்ளதாகவும், அதை காங்கிரஸ் விட்டுக்கொடுக்க மறுத்ததால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறிவருகிறார்கள். அது முற்றிலும் தவறானது. நான் இதுகுறித்து குமாரசாமியிடம் பேசவில்லை. அதற்குள் பலர் பலவிதமாக பேசி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
தோழி வீட்டில் விருந்து
பின்னர் மாலையில் முதல்-மந்திரி சித்தராமையா, மைசூரு சித்தார்த்தா லே-அவுட்டில் வசித்து வரும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அந்த பெண் என்னுடைய தோழி. பள்ளியில் எனது வகுப்பில் படித்த சக மாணவி. அவருடைய பெயர் ராஜலட்சுமி. தற்போது அவர் அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். என்னை விருந்துக்கு அழைத்திருந்தார். அதனால் நான் இங்கு வந்தேன்” என்று கூறினார்.
Related Tags :
Next Story