குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் இருந்தால் வெளியிடுங்கள் ராகுல்காந்திக்கு எடியூரப்பா சவால்


குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் இருந்தால் வெளியிடுங்கள் ராகுல்காந்திக்கு எடியூரப்பா சவால்
x
தினத்தந்தி 12 Sept 2017 3:32 AM IST (Updated: 12 Sept 2017 3:32 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் வெளியிடுங்கள் என்று ராகுல்காந்திக்கு, எடியூரப்பா சவால் விடுத்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(வயது 55). பத்திரிகையாளரும், எழுத்தாளருமான இவரை கடந்த 5-ந் தேதி இரவு மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். கொலையாளிகளை சிறப்பு விசாரணை குழுவினர் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

இதற்கிடையே, கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக ராகுல்காந்தி கருத்து தெரிவிக்கையில், ‘பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் தாக்கப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள்’ என்றார். ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு பா.ஜனதா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

ஆதாரங்கள் இருந்தால் வெளியிடுங்கள்

கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக ராகுல்காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு அவரிடம் ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் அதை வெளியிடட்டும். ஆதாரங்கள் இருந்தால் அதை வெளியிடுங்கள் என்றுதான் நாங்களும் கூறி வருகிறோம். கவுரி லங்கேஷ் வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழு சரியான வழியில் விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நாங்கள் கேட்டு கொள்கிறோம்.

அனைத்து வகையான விசாரணைகளும் முடிவடைந்த பின்னர் குற்றவாளிகள் யார் என்பது தெரியவரும். அவர்களை தூக்கில் போட வேண்டும். இதற்கு நாங்கள் (பா.ஜனதா) எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டோம். இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்க வேண்டுமா? அல்லது சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமா? என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு...

கர்நாடக அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. இதன் எதிரொலியாக மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா பிரமுகர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

குறைந்தபட்சம் கவுரி லங்கேஷ் வழக்கிலாவது மாநில அரசு குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார். 

Next Story