பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் தேவேந்திர பட்னாவிஸ் உறுதி
அடுத்த மாதம் முதலாவது வாரத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதியளித்தார்.
மும்பை,
மராட்டியத்தில் 89 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு, ரூ.34 ஆயிரம் கோடி வரை பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். எனினும், விவசாயிகளின் விவரங்களை பெறுவதில் ஏற்படும் குளறுபடி காரணமாக பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில், பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு சிவசேனா நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார். இதனை ஏற்று நேற்று அக்கட்சியை சேர்ந்த எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் அவர்களது தொகுதிகளில் தங்கள் ஆதரவாளர்களுடன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்னாவிஸ் உறுதி
இதனிடையே, சிவசேனா பிரதிநிதிகள் மும்பையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து, தசரா விழாவையொட்டியாவது பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூறி மனு அளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட அவர், அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் வாரத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் நடைமுறைக்கு வரும் என உறுதியளித்தார்.
10 லட்சம் போலி விண்ணப்பங்கள்
அதே வேளையில், கோலாப்பூரில் நிருபர்களை சந்தித்த வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், “பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ், 10 லட்சம் பேர் போலியாக விண்ணப்பித்திருக்கின்றனர். விண்ணப்பங்களை ஆய்வுசெய்யும் பணி தொடர்ந்து நீடிப்பதால் காலதாமதம் ஏற்படுகிறது. ஆகையால், அக்டோபர் கடைசி வாரத்தில் தான் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் நடைமுறைக்கு வரும்” என்றார்.
Related Tags :
Next Story