சென்னை புளியந்தோப்பு மாநகராட்சி பூங்கா இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை


சென்னை புளியந்தோப்பு மாநகராட்சி பூங்கா இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Sept 2017 5:15 AM IST (Updated: 12 Sept 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

புளியந்தோப்பு மாநகராட்சி பூங்கா இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் 2 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளனர்.

பெரம்பூர்,

சென்னை புளியந்தோப்பு, அம்பேத்கர் கல்லூரி சாலை கணேசபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடம் உள்ளது. 2014-ம் ஆண்டு இப்பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி கட்டிடம் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்தது. இக்கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்ட முடிவு செய்து நிதி ஒதுக்கப்பட்டது.

அதுவரை அந்த குடியிருப்பில் வசித்துவந்தவர்கள் தற்காலிகமாக மாநகராட்சி பூங்கா இடத்தில் குடிசைகள் அமைத்து தங்கவைக்கப்பட்டனர். தற்போது புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிமுடிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்.

அங்கு ஏற்கனவே குடியிருந்த அனைவருக்கும் குடிசைமாற்று வாரியம் மூலம் வீடுகள் ஒதுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். ஆனால் அவர்கள் பூங்கா இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடிசை வீடுகளை காலிசெய்யாமல் தொடர்ந்து அவைகளிலேயே வசித்துவந்தனர்.

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வேறு சிலருக்கு வாடகைக்கு விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை குடிசைமாற்று வாரியம் கண்டுகொள்ளாத நிலையில், நேற்று சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் 6-வது மண்டல அதிகாரி மோகனசுந்தரம், செயற்பொறியாளர் செந்தில்நாதன் மற்றும் அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த குடிசைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குடியிருப்புவாசிகள் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்குள் குடிசைகளை காலிசெய்யாவிட்டால் அதிரடியாக அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story