ரெயில்வே அதிகாரி எனக்கூறி 3-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது


ரெயில்வே அதிகாரி எனக்கூறி 3-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Sept 2017 6:45 AM IST (Updated: 12 Sept 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே அதிகாரி எனக்கூறி 3-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

மாதவரம் மேற்கு தணிகாசலம் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் நந்தகுமார் (வயது 35). கார் டிரைவராக வேலை செய்து வந்தார். ஆனால் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ரெயில்வேயில் அதிகாரியாக வேலை பார்த்து வருவதாக கூறி ஏற்கனவே 2 பெண்களை ஏமாற்றி திருமணம் முடித்தார்.

திருமணத்திற்கு பின்பு தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்தவுடன் அந்த 2 பெண்களும் அவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். இதேபோல் கடந்த ஆண்டு கொளத்தூர் பகுதியை சேர்ந்த உஷா (35) என்பவரிடமும் நந்தகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் நந்தகுமாருக்கும் ஓட்டேரி கொசப்பேட்டையை சேர்ந்த துரை என்பவரது மகள் விஜயலட்சுமி என்பவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. ஏற்கனவே நந்தகுமாருக்கு 2 திருமணம் முடிந்ததும், மற்றொரு பெண்ணுடனும் அவர் வாழ்ந்து வருவதும் விஜயலட்சுமி வீட்டினருக்கு தெரியவில்லை

இந்த சம்பவம் உஷாவுக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் செம்பியம் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் ‘நந்தகுமார் ரெயில்வே அதிகாரி என ஏமாற்றி ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்தார்.

மேலும், ரெயில்வேயில் வேலைபார்ப்பதாக ஆசை வார்த்தை கூறி என்னுடனும் சேர்ந்து வாழ்ந்து வந்தார். தற்போது அவர் 3-வது திருமணமும் செய்ய உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரின்பேரில் செம்பியம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து 2 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நந்தகுமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது குறித்து துரை வீட்டினருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். 

Next Story