தந்தை இறந்த சோகத்தில் கிணற்றில் குதித்து அக்காள்–தம்பி தற்கொலை
தந்தை இறந்த சோகத்தில் இருந்து வந்த அக்காள்–தம்பி இருவரும் தங்களை கவனிக்க இனிமேல் யாரும் இல்லையே என கருதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
திருவொற்றியூர்,
சென்னையை அடுத்த மணலி சின்னசேக்காடு என்ற இடத்தை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு பஞ்சாட்சரம் (வயது 42), நாகேந்திரன் (38) என்ற 2 மகன்களும், வேதநாயகி (40) என்ற மகளும் உள்ளனர்.
மூத்தமகன் பஞ்சாட்சரத்திற்கு திருமணம் ஆகிவிட்டது. சரியான வரன் கிடைக்காததால் வேதநாயகி, நாகேந்திரன் ஆகியோருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தனித்தனி அறையில் வசித்து வந்தனர்.
அவர்கள் குடியிருக்கும் வீட்டை சுற்றி சின்னராஜுக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து வந்தனர். நாகேந்திரன் கீரை வியாபாரம் செய்து வந்தார்.
சின்னராஜ் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் யாரிடமும் நெருங்கி பழகாமல் இருந்து வந்தனர். உறவினர்கள் வீட்டிற்கும் செல்லாமல் இருந்து வந்தனர்.
கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு சின்னராஜ் இறந்துபோனார். இதனால் வேதநாயகியும், நாகேந்திரனும் மிகவும் மனம் வருந்தினர். தங்களுக்கு இனிமேல் யார் இருக்கிறார்கள்? நமக்கு யார் திருமணம் செய்து வைப்பார்கள்? என்று மனவேதனையில் 2 பேரும் இருந்து வந்தனர்.
நேற்று காலை பஞ்சாட்சரம், வீட்டு தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகே சென்றார். அப்போது கிணற்றின் மீது போடப்பட்டிருந்த மூடி திறந்து கிடந்தது. அதை அவர் எடுத்து மூட சென்ற போது கிணற்றின் உள்ளே வேதநாயகியும், நாகேந்திரனும் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மணலி போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் 2 பிணங்களையும் கிணற்றிலிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அக்காள்–தம்பி இருவரும் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவர்களின் சொத்தை அபகரிக்க அவர்களை யாரும் கொலை செய்து கிணற்றில் போட்டு விட்டு சென்று விட்டனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.