இறந்ததாக கருதிய கணவரை உயிருடன் பார்த்து மனைவி அதிர்ச்சி


இறந்ததாக கருதிய கணவரை உயிருடன் பார்த்து மனைவி அதிர்ச்சி
x
தினத்தந்தி 12 Sept 2017 9:38 AM IST (Updated: 12 Sept 2017 9:38 AM IST)
t-max-icont-min-icon

இறந்துவிட்டதாக கருதிய கணவரை 10 மாதங்களுக்கு பிறகு உயிருடன் பார்த்த மனைவி அதிர்ச்சியடைந்தார். விபத்தில் இறந்ததாக கூறி அந்தப்பெண் இறுதிச்சடங்கு செய்த நபர் யார்? என்பது தெரியவில்லை.

பாலக்காடு,

திலகம் இல்லாத நெற்றி-பூச்சூடாத கூந்தலுடன் விதவை கோலத்தில் இருந்த அந்த பெண் மன ஆறுதலுக்காக பழனியில் முருகனை தரிசித்து விட்டு உறவினர்களுடன் படிக்கட்டுகளில் இறங்கி கொண்டிருந்தார். எதிரே வந்தவரை பார்த்ததும் ‘என்ட பர்த்தாவல்லே’ (என்னுடைய கணவர்) என்றபடி ஓடிச்சென்று கட்டித்தழுவி கண்ணீர் விட்ட அந்த கேரள பெண்ணை பார்த்ததும் அங்கு நின்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
கூட்டம் கூடியது. சில நிமிடம் கண்ணீர் விட்டபடி இருந்த அந்த பெண் கணவரை தழுவியபடி கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்துவிட்டு சொன்ன விஷயங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அந்த பெண்ணின் பெயர் ராஜேஸ்வரி (வயது 54). கணவர் பெயர் கிருஷ்ணன் குட்டி (58). கேரள மாநிலம் கொல்லங்கோடு வடக்கதரையை சேர்ந்தவர்கள். கிருஷ்ணன் குட்டி கூலித்தொழிலாளியாக வேலை பார்த்தார். கனவன்-மனைவி இருவரும் சந்தோஷமாகத்தான் குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவியிடம் கோபித்துக் கொண்டு கிருஷ்ணன்குட்டி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

அவர் எங்கே சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அவர் வீட்டை விட்டுச்சென்ற சில நாட்களில் கோவை உக்கடத்தில் இருந்து போலீசார் கேரளா சென்றனர். அங்கு ராஜேஸ்வரியை சந்தித்து சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் ஒருவர் கிருஷ்ண சந்திரன் என்கிறார். அது காணாமல் போன உங்கள் கணவர் தானா? என்று பாருங்கள் என்றனர்.

போட்டோவில் இருந்தவர் தலைநிறைய முடியும் தாடியுமாக இருந்ததால் சரியாக அடையாளம் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக இவர் எனது கணவர் இல்லை என்றார் ராஜேஸ்வரி. அடுத்த சில நாட்களில் கிருஷ்ணசந்திரன் இறந்து போனார். இதையடுத்து மீண்டும் ராஜேஸ்வரியையும், அவரது உறவினர்களையும் அழைத்து நன்றாக அடையாளம் பார்க்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டார்கள். என் கணவருக்கு கையில் ஒரு வெட்டுத்தழும்பு, முதுகில் ஒரு பெரிய மச்சம் இருக்கும் என்றார். அதை மருத்துவர்கள் பார்த்தனர். அவர் சொன்ன அடையாளங்கள் அனைத்தும் அப்படியே இருந்தன.

அதை வைத்து இறந்தது தன் கணவர்தான் என்று ராஜேஸ்வரி அழுது புலம்பினார். பின்னர் உடலை பெற்று இறுதிச்சடங்குகள் செய்து முடித்தனர்.

கணவர் இறந்த துக்கத்தில் இருந்த ராஜேஸ்வரியை உறவினர்கள் ஆறுதலுக்காக கோவில்களுக்கு செல்லலாம் என்று பழனிக்கு அழைத்து வந்துள்ளார்கள். இங்கு வந்த இடத்தில்தான் இறந்து போனதாக கருதப்பட்ட தனது கணவர் தன் கண் முன்னால் வந்ததை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்து உள்ளார். கிருஷ்ணன் குட்டி கிடைத்ததும் ராஜேஸ்வரியும் அவரது உறவினர்களும் ஆனந்தம் அடைந்தனர்.

மீண்டும் மலையேறி முருகனுக்கு நன்றி சொல்லி மனம் உருகி வழிபட்டனர். தனியாக வந்த ராஜேஸ்வரி கணவருடன் சந்தோஷத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டார். அங்கு கூடி நின்றவர்கள் அவர்களை வாழ்த்தி வழியனுப்பினார்கள்.

இந்தநிலையில் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story