திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானலுக்கு சென்ற போது பாதி வழியில் பஸ்சை நிறுத்திவிட்டு ஓடிய டிரைவர்


திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானலுக்கு சென்ற போது பாதி வழியில் பஸ்சை நிறுத்திவிட்டு ஓடிய டிரைவர்
x
தினத்தந்தி 12 Sept 2017 3:00 PM IST (Updated: 12 Sept 2017 2:12 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானலுக்கு சென்ற போது, பாதி வழியில் பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவர் ஓடிவிட்டார். இதனால் சுமார் 2 மணி நேரம் பயணிகள் அவதி அடைந்தனர்.

தேவதானப்பட்டி,

திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானலுக்கு நேற்று அதிகாலை ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் ஏராளமானோர் பயணம் செய்தனர். பஸ் புறப்பட்டதில் இருந்தே டிரைவர் அதனை தாறுமாறாக ஓட்டியதாக தெரிகிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே பஸ் தேவதானப்பட்டியை அடுத்த கெங்குவார்பட்டி காட்ரோடு பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தது.

அப்போது டிரைவரிடம் மிதமான வேகத்தில் பஸ்சை ஓட்டும்படி சில பயணிகள் கூறினர். ஆனால் அதன் பின்னரும் பஸ்சை டிரைவர் தாறுமாறாகவே ஓட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் டிரைவரை தட்டிக்கேட்டதாக தெரிகிறது.

இதையடுத்து சாலையோரத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு ஓடிய டிரைவர், அந்த வழியாக சென்ற மற்றொரு அரசு பஸ்சில் ஏறி சென்று விட்டார். இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இது குறித்து பயணிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

திண்டுக்கல்லில் இருந்து புறப்படும் போதே பஸ்சை அதிவேகமாக டிரைவர் ஓட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் ஒரு கட்டத்தில் அவரை தட்டிக்கேட்டோம். அதனால் அவர் பாதி வழியிலேயே பஸ்சை நிறுத்திவிட்டு வேறு பஸ்சில் ஏறி சென்றுவிட்டார்.

பின்னர் கண்டக்டரிடம் இது குறித்து முறையிட்டோம். அவர், போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி மாற்று டிரைவர் அனுப்பும்படி தெரிவித்தார்.
சுமார் 2 மணி நேரம் கழித்து மாற்று டிரைவர் வந்து பஸ்சை இயக்கினார். இதனால் சுமார் 2 மணி நேரம் நாங்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினோம். பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மதுபோதையில் இருந்திருப்பாரோ? என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, டிரைவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளது. இதற்கிடையே பஸ்சை ஓட்டும்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தி உள்ளார். இதையடுத்து எதிரே வந்த மற்றொரு பஸ்சில் ஏறி வத்தலக்குண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்ந்துள்ளதாக கூறினார்.

Next Story