மாவட்ட செய்திகள்

மனைவியுடன், கருணை கொலை செய்ய அனுமதிகோரி போக்குவரத்து ஊழியர் மனு + "||" + With his wife, To kill the grace Permit petition

மனைவியுடன், கருணை கொலை செய்ய அனுமதிகோரி போக்குவரத்து ஊழியர் மனு

மனைவியுடன், கருணை கொலை செய்ய அனுமதிகோரி போக்குவரத்து ஊழியர் மனு
ஓய்வூதியம் கிடைக்காததால் வறுமையில் தவித்து வரும் தன்னையும், மனைவியையும் கருணை கொலை செய்ய அனுமதிகோரி மேனு அனுப்பிய போக்குவரத்து ஊழியரை நேரில் ஆஜராகுமாறு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). ஓய்வுபெற்ற பயணச்சீட்டு ஆய்வாளரான இவர், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை மற்றும் திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு மனு அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
நான் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி கடந்த 2006-ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். எனக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வீதம் ஓய்வூதியம் வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில், போக்குவரத்து கழக அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் கடந்த 10 மாதங்களாக ஓய்வூதியம் தரப்படவில்லை. என்னைப்போல சுமார் 70 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை.

மேலும், நீதிமன்ற உத்தரவையும் அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர். இதன்காரணமாக மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் வறுமையில் வாடி வருகிறேன். எனவே என்னையும், எனது மனைவியையும் கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டி ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நாராயணனுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தாங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள கோரிக்கையானது சட்டம் சார்ந்ததா? அல்லது வேறு துறை சார்ந்ததா? என்பது பற்றியும், சட்ட உதவிகள் தேவைப்படுகிறதா? என்பது பற்றியும் பரிசீலனை செய்வதற்கு தேவையான விவரங்களை நேரில் பெற வேண்டி உள்ளது.

எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.