கன்னியாகுமரி அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வீட்டில் நகை–பொருட்கள் கொள்ளை


கன்னியாகுமரி அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வீட்டில் நகை–பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 13 Sept 2017 3:45 AM IST (Updated: 12 Sept 2017 10:33 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வீட்டில் நகை, பொருட்களை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கொள்ளையடித்தனர். மேலும் ஏ.டி.எம். கார்டையும் தூக்கி சென்று பணத்தை எடுத்து சென்றனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தை சேர்ந்தவர் சிதம்பரதாணு பாஸ்கரன் (வயது78), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மகன் கோவேந்தராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே ஊரில் புதிய வீடு கட்டி உள்ளார்.  இதனால், சிதம்பரதாணு பாஸ்கரன் தனது வீட்டை பூட்டிவிட்டு மகன் வீட்டில் வசித்து வருகிறார். பூட்டிய வீட்டுக்குள் ஏ.டி.எம். கார்டு, நகை போன்றவை இருந்தன.

இந்தநிலையில், சிதம்பரதாணுவின் செல்போனுக்கு ஒரு தகவல் வந்தது. அதில் அவரது வங்கி கணக்கில்  இருந்து ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.11 ஆயிரம் எடுத்ததாக கூறப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த சிதம்பரதாணு தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவில் துளை போடப்பட்டிருந்தது.

மேலும், வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2½ பவுன் தங்க நகை, ஏ.டி.எம். கார்டு, பட்டுப்புடவை, பூஜை அறையில் இருந்த 2 வெள்ளி விளக்குகள் போன்றவை கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. யாரோ மர்ம நபர்கள் கதவில் துளைபோட்டு உள்ளே புகுந்து, நகை, ஏ.டி.எம்.கார்டு, வெள்ளி விளக்கு போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண் அதனுடன் எழுதி  வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. அதை எடுத்து சென்ற அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story