இளைஞர்கள் தொழில் தொடங்கும் திட்டத்திற்கு திங்கட்கிழமை தோறும் சிறப்பு கூட்டம்
இளைஞர்கள் தொழில் தொடங்கும் திட்டத்திற்கு திங்கட்கிழமை தோறும் சிறப்பு கூட்டம் கலெக்டர் லதா தகவல்
சிவகங்கை,
முதல் தலைமுறை இளைஞர்கள் தொழில் தொடங்கும் திட்டத்திற்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.
கலெக்டர் லதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் ஒவ்வொரு இளைஞரையும், தொழில் முனைவோராக உருவாக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதன்படி புதிய தொழில் தொடங்க, முதல் தலைமுறை இளைஞர்களுக்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் அந்தந்த மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை திட்ட மதிப்பில் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்துடன் தமிழக அரசின் மானியமாக 25 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. அதாவது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
தமிழக முதல்–அமைச்சரின் சிறப்பு திட்டமான இந்த திட்டத்தில் வங்கிகளில் கடனுதவி பெறவும், தொழில் தொடங்குவதற்கு மின் இணைப்பு பெறவும் மற்றும் பல்வேறு உரிமங்கள் விரைவில் கிடைத்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் மகளிருக்கு 50 சதவீத ஒதுக்கீடும், ஆதிதிராவிடர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அரசு மூலம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதலில் வரும் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி கடனுதவி வழங்கப்படும்.
இந்த புதிய திட்டம் குறித்த சிறப்பு வழிகாட்டுதல் கூட்டம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தொழில் தொடங்க ஆர்வமுள்ள முதல் தலைமுறை இளைஞர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.