வேட்டங்குடி சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு


வேட்டங்குடி சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 Sept 2017 4:30 AM IST (Updated: 12 Sept 2017 11:14 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு தற்போது வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரித்து வருகின்றது.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கொள்ளுக்குடிபட்டி கண்மாயில் அமைந்துள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். 38 ஏக்கர் பரப்பளவில் உள்ள சரணாலய பகுதியில், சமீபத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தற்போது அப்பகுதி பசுமையாக காணப்படுகிறது. பொதுவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தமிழகத்தில் இனப்பெருக்கம் செய்வதற்காக நீர் நிலைகளை தேடி லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து வரும். பின்னர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தங்களது இருப்பிடங்களுக்கு செல்வது வழக்கம். அப்போது வேட்டங்குடி பறவைகள் சராணலயத்தில் உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள்மூக்கன், கரண்டிவாயன், நத்தைகொத்திநாரை போன்ற 217 வகையான வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து செல்லும்.

கடந்த ஆண்டு இப்பகுதியில் போதிய மழையில்லாததால் தாமதமாக வந்த வெளிநாட்டு பறவைகளும், டிசம்பர் மாதத்திலேயே தங்களது இருப்பிடத்திற்கு திரும்பி சென்றுவிட்டன. இந்தநிலையில் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இதன்காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இதேபோல் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் பகுதியில் உள்ள கண்மாய்களும் நீர் நிரம்பி பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் தற்போது சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த பறவைகள் வருகை முன்கூட்டியே உள்ளதால் இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் என்று அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது தங்களது நிலத்தில் விவசாய பணிகளை தொடங்கிவிட்டனர்.

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகள் காலையில் இரை தேடி, மாலையில் சரணாலயத்திற்கு வந்து கூடுக்கட்டி இனப்பெருக்கம் செய்கின்றது. இதை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாததால் ஏமாற்றம் அடைகின்றனர். இங்குள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் வந்துசெல்ல சிரமமாக உள்ளது. மேலும் தொலைநோக்கி கருவி, பூங்கா உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும், சரணாலயம் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும், சுற்றுலா துறைக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story