ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட 2 வாலிபர்கள் உடல் கரை ஒதுங்கியது


ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட 2 வாலிபர்கள் உடல் கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 13 Sept 2017 4:30 AM IST (Updated: 13 Sept 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

செங்கம் நீப்பத்துறை அருகே தென்பெண்ணையாற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்களின் உடல்கள் அரூர் அருகே கரை ஒதுங்கியது.

செங்கம்,

கிருஷ்ணகிரி அணை யிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே நீப்பத்துறையில் உள்ள கோவில் அருகிலும் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டம் கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் நீப்பத்துறை கோவிலில் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெங்களூரு ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த ராஜா மகன் அஜய் (வயது 18), வடிவேலு மகன் விஜய் (18) ஆகியோர் வந்தனர். இவர்கள் இருவரும் கோவிலிலிருந்து சற்று தொலைவில் தென்பெண்ணையாற்றில் குளித்தனர்.

அவர்களை வெள்ளம் இழுத்து சென்றது. இது குறித்து தகவலறிந்த மேல் செங்கம் போலீசார் மற்றும் செங்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

இதையடுத்து 2-வது நாளாக நேற்று முன்தினம் செங்கம் மற்றும் தர்மபுரி மாவட்டம் அரூர் தீயணைப்பு நிலைய வீரர் களும் அவர்களை பரிசல் மூலம் ஆற்றில் தேடினர். இரவு நேரமானதால் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியை கைவிட்டு சென்றனர்.

ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட 2 பேரும் கிடைக்காததால் அவர்கள் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் 3-வது நாளாக நேற்று அதிகாலை தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட தொடங்கினர். இதற்கிடையில் தர்மபுரி மாவட்டம் வேடகட்டுமடுவு பகுதியில் 2 வாலிபர்களின் உடல்கள் கரை ஒதுங்கி கிடப்பதாக அரூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த உடல்களை பார்வையிட்டனர். இறந்து கிடப்பது அஜய், விஜய் என்பது உறுதி செய்யப்பட்டது. தகவலறிந்த அந்த வாலிபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்றனர். இறந்த அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதனர். இருவரது உடல்களையும் கோட்டப்பாடி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து கோட்டப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . 

Related Tags :
Next Story