சுதந்திர தினத்தில் அவமதிப்பு: ஒரு வாரம் தினமும் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்த வேண்டும்


சுதந்திர தினத்தில் அவமதிப்பு: ஒரு வாரம் தினமும் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்த வேண்டும்
x
தினத்தந்தி 13 Sept 2017 4:45 AM IST (Updated: 13 Sept 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தின்போது தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அரசு டாக்டர் ஒருவாரம் தினமும் தேசிய கொடியேற்றி தேசிய கீதம் பாட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆம்பூர்,

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி நடந்த சுதந்திர தின விழாவில் ஆர்.பாலசுப்பிரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார். அப்போது மருத்துவ அலுவலர் டாக்டர் கென்னடி, செல்போனில் பேசிக்கொண்டே இருந்தார். இதனை கவனித்த எம்.எல்.ஏ. அவரது கையை தட்டினார். ஆனால் விழா முடியும் வரையிலும் அவர் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தார். இது குறித்து நாளிதழ்கள் மற்றும் டி.வி.யில் செய்தி வெளியானது.

தேசிய கொடியேற்றியபோது அதனை அவமதித்த மருத்துவ அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் நகரசபை உறுப்பினர் இ.சுரேஷ்பாபு ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டவுன் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து மருத்துவ அலுவலர் டாக்டர் கென்னடி ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், “ஒரு வாரத்திற்கு ஆஸ்பத்திரியில் தினமும் காலை 10 மணிக்கு தேசிய கொடியேற்ற வேண்டும், கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும், தேசிய கீதம் பாட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் இதனை ஆம்பூர் டவுன் போலீசார் கண்காணித்து ஆம்பூர் கோர்ட்டில் தினமும் தகவல் தர வேண்டும்” என தெரிவித்தார்.

அந்த உத்தரவின்படி முதல் நாளான நேற்று காலை 10 மணிக்கு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆம்பூர் டவுன் போலீசார் முன்னிலையில் மருத்துவ அலுவலர் டாக்டர் கென்னடி தேசியகொடியேற்றி வைத்து அதற்கு வணக்கம் செலுத்தி பிறகு தேசிய கீதம் பாடினார். அப்போது மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர். 

Next Story