மாவட்ட செய்திகள்

வண்ணாரப்பேட்டையில் மாமூல் கேட்ட ரவுடி வெட்டிக்கொலை + "||" + In Washermanpet rowdy Cut and kill

வண்ணாரப்பேட்டையில் மாமூல் கேட்ட ரவுடி வெட்டிக்கொலை

வண்ணாரப்பேட்டையில்
மாமூல் கேட்ட ரவுடி வெட்டிக்கொலை
வண்ணாரப்பேட்டையில் மாமூல் கேட்ட ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயபுரம், 

புதுவண்ணாரப்பேட்டை செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் என்கிற கேட் முருகன் (வயது 41). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி, திருட்டு வழக்குகள் உள்ளன. முதலில் பழைய வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரத்தில் வசித்து வந்த முருகன், போலீஸ் கெடுபிடி அதிகம் இருந்ததால், குடும்பத்துடன் புதுவண்ணாரப்பேட்டைக்கு குடியேறினார்.

இருப்பினும் அடிக்கடி சீனிவாசபுரத்திற்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக சீனிவாசபுரத்திற்கு முருகன் சென்றார்.

வெட்டிக்கொலை

அப்போது அவரை வழிமறித்து 5 பேர் கொண்ட கும்பல் தகராறில் ஈடுபட்டது. பின்னர், அந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் முருகனை சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு காயம் அடைந்த முருகன் ரத்தவெள்ளத்தில் சரிந்தார்.

தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து, உயிருக்குபோராடிக்கொண்டு இருந்த முருகனை காப்பாற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

4 பேரிடம் விசாரணை

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த மதன், கார்த்திக், ராமு, தினேஷ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சின்னு என்பவரை தேடி வருகின்றனர். இவர்கள் 5 பேரும், செல்போன் திருடர்கள் என்று கூறப்படுகிறது.

ரவுடி முருகன், அவர்களை மிரட்டி மாமூல் வாங்கி வந்ததாக தெரிகிறது. கடந்த 3 மாதங்களாக முருகன் மாமூல் வாங்க செல்லவில்லையாம். நேற்று முன்தினம் முருகன் மாமூல் கேட்டு அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த அவர்கள் அந்த பகுதிக்கு சென்ற முருகனை நேற்று பழி தீர்த்ததாக கூறப்படுகிறது.

பிடிபட்ட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.