மத்திய அரசு பச்சை தேயிலைக்கு ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பச்சை தேயிலைக்கு ஆதார விலை கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் சுப்பராயன் கூறினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் ஊட்டி நகராட்சி பள்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் போஜராஜ் முன்னிலை வகித்தார். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சுப்பராயன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மக்கள் விரோதப்போக்கை கடைபிடித்து வரும் மத்திய, மாநில அரசுகள் குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடந்த 1–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்தித்து தெரிவித்து வந்தோம். ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கூட்டம் நடத்தப்பட்டு தொழிலாளர்களுக்கான விரோதப்போக்கை கேட்டறிந்து வருகிறோம். இது குறித்து வருகிற 20 மற்றும் 21–ந் தேதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பா.ஜனதா அரசு கொண்டு வந்த நீட் தேர்வு உத்தரவு மூலம் தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக் கைகள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதில்லை. இதற்கு மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசை அ.தி.மு.க. அரசு ஆதரித்து வருவதே ஆகும். எனவே மத்திய, மாநில அரசுகளை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்க சட்ட ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் தகுதி இல்லை. எனவே, சட்டமன்றத்தை உடனே கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஜனநாயக உரிமைப்படி, போராட்டத்தில் குதிப்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதை கண்டிக்கிறோம்.
அரசு ஊழியர்கள் தங்களின் ஜனநாயக உரிமையை வலியுறுத்தி போராடுகிறார்கள். அவர்களை தமிழக அரசு நேரிடையாக அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். அதை விட்டு விட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது கண்டனத்திற்குரியது. அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்றும் துணை நிற்கும்.
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு ஆதார விலை கிடைப்பதில்லை. இதற்கு மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கை தான் காரணம். வெளிநாடுகளில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேயிலைக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எனவே, மத்திய அரசு அந்த கொள்கையை கைவிட்டு, உள்நாட்டு தேயிலைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பச்சை தேயிலைக்கு ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பெள்ளி ஆகியோர் உடன் இருந்தனர்.