மாவட்ட செய்திகள்

வழுதலம்பேட்டில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு + "||" + Resistance to the newly opened bartender

வழுதலம்பேட்டில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு

வழுதலம்பேட்டில்
புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு
வழுதலம்பேட்டில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி,

குன்றத்தூர்-திருமுடிவாக்கம் சாலை, வழுதலம்பேட்டில் புதிதாக நேற்று முன் தினம் மதுக்கடை திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழுதலம்பேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் குன்றத்தூர்- திருமுடிவாக்கம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை ஆனால் தேவை இல்லாத மதுக்கடையை மட்டும் திறந்து உள்ளனர். இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், நிறுவனங்கள் உள்ளது. மேலும் இந்த சாலையை ஒட்டி உள்ள பகுதிகளில் மின்விளக்குகள் இல்லை.

இதனால் இரவு நேரத்தில் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக நடந்து வரும் பெண்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். இதன் மூலம் பல்வேறு குற்ற சம்பவங்களும், சாலை விபத்துகளும் ஏற்படும் என்று தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அங்கிருந்து மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து தற்காலிகமாக மதுக்கடை மூடப்பட்டது.

மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.