கோவையில் சீர்மிகு நகர திட்டத்துக்கு புதிய ஆய்வகம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோவையில் சீர்மிகு நகர திட்டத்துக்கு புதிய ஆய்வகம் அமைக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் ஜெர்மன் நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கோவை,
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் (ஸ்மார்ட் சிட்டி) கோவை தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்துடன் குளங்களை சுத்தப்படுத்துதல், சாலைகள் அமைத்தல் உள்பட பல்வேறு பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட உள்ளன.
இதற்காக ஜெர்மன் நாட்டு உதவியுடன் கோவை மாநகராட்சியில் புதிய ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசும் அனுமதி வழங்கியது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இதில் தமிழக நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில், கோவை மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், ஜெர்மன் நாட்டை சேர்ந்த பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கான இந்திய நாட்டின் இயக்குனர் ஆனந்தி அய்யர் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் அதிகாரிகள் அந்த ஒப்பந்தத்தை அமைச்சரிடம் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னையில் உள்ள ஜெர்மன் நாட்டு தூதுவர் அகிங் பேபிக், நகராட்சி நிர்வாக ஆணையாளர் கோ.பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வகம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:–
இந்தியாவிலேயே முதல் முறையாக சீர்மிகு நகர திட்டத்துக்கு ஆய்வகம் கோவை மாநகராட்சியில்தான் அமைக்கப்படுகிறது. இந்த ஆய்வகம் மூலம், சீர்மிகு நகர திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற நகரங்களை பங்குபெற செய்வதுடன், அவர்களிடம் கலந்துரையாடல் செய்ய உதவியாக இருக்கும். மேலும் இந்த ஆய்வகத்தின் மூலம் புதிய கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடிக்க முடியும்.
அதுபோன்று திட்டப்பணிகளை செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களை ஜெர்மன் நாட்டில் இருக்கும் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும். மேலும் ஒரு திட்டத்தை எவ்வாறு செய்வது என்பது குறித்து ஜெர்மன் நாட்டு நிர்வாகிகள் இங்குள்ள அதிகாரிகளுக்கு பயிற்சிகளையும் வழங்குவார்கள். முழுக்க முழுக்க கோவை வளர்ச்சிக்காகவே இந்த ஆய்வகம் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.