கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2,500 பேர் கைது


கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2,500 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2017 4:30 AM IST (Updated: 13 Sept 2017 1:23 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 2 ஆயிரத்து 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் (ஜாக்டோ-ஜியோ) வேலூர் மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம், சாலைமறியல் போன்ற போராட்டங்களை தொடர்ந்தனர். இதன் தொடர்ச்சியாக, ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தை 12-ந் தேதி (அதாவது நேற்று) முற்றுகையிடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, அறிவழகன், லட்சுமணன் மேற்பார்வையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் சாலை உள்பட முக்கிய பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக காலை முதலே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே வரத்தொடங்கினர். ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் போலீசார் சாலை தடுப்புகளை கொண்டு அரண்போல் அமைத்திருந்தனர். போராட்டத்திற்கு வந்த ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் ஆஞ்சநேயர் கோவில் அருகே திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். நேரம் செல்ல செல்ல போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை தாண்டி சாலையில் நின்றவாறு அவர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக திரண்டு சென்றனர். கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் அணுகு சாலை மற்றும் மேம்பாலத்திற்கு அடியில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டு தர்ணா செய்தனர். இதனால், இரு மார்க்கத்திலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2 ஆயிரத்து 500 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி நேதாஜி விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பின்பு போக்குவரத்து சீரானது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் இந்த ‘திடீர்’ சாலைமறியல் மற்றும் தர்ணா போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.


Related Tags :
Next Story