பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொலை: பெங்களூருவில் கன்னட எழுத்தாளர்கள் பிரமாண்ட ஊர்வலம்


பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொலை: பெங்களூருவில் கன்னட எழுத்தாளர்கள் பிரமாண்ட ஊர்வலம்
x
தினத்தந்தி 13 Sept 2017 3:30 AM IST (Updated: 13 Sept 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து கன்னட எழுத்தாளர்களின் பிரமாண்ட ஊர்வலம் பெங்களூருவில் நடைபெற்றது.

பெங்களூரு,

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து கன்னட எழுத்தாளர்களின் பிரமாண்ட ஊர்வலம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கன்னட எழுத்தாளர்கள்

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(வயது 55). இவர் ‘லங்கேஷ்‘ என்ற வாரப்பத்திரிகையை நடத்தி வந்தார். முற்போக்கு கருத்துகளை எழுதி வந்த அவர், கடந்த 5–ந் தேதி இரவு மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்கா உள்பட வெளிநாட்டு தூதரகங்களும் இந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டன. இந்த கொலையில் கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும், கொலையாளிகளை விரைந்து கைது செய்யுமாறு கோரியும் கவுரி லங்கேஷ் கொலை எதிர்ப்பு குழு சார்பில் பிரமாண்ட ஊர்வலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில் கன்னட எழுத்தாளர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மத நல்லிணக்க அமைப்பு

இதில், “நான் கவுரி, நாங்கள் கவுரி“ என்று முழக்கமிட்டனர். கொலையாளிகளை விரைவாக கைது செய்ய வேண்டும், முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். அவர்கள் கைகளில் கவுரி லங்கேசின் உருவ படம் இருந்த பதாகைகளை ஏந்தி இருந்தனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் தலையில் கருப்பு பட்டைகளை கட்டி இருந்தனர்.

இந்த ஊர்வலத்தில் மத நல்லிணக்க அமைப்பு, தலித் சங்கர்ச சமிதி, மக்கள் சக்தி மையம், கம்யூனிஸ்டு கட்சிகள், மண்டல விவசாய சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நாட்டுப்புற கலை குழு, பல்வேறு கலாசார குழுக்கள், பஜனை குழுக்களை சேர்ந்தவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெற்று இருந்தன. இந்த ஊர்வலம் சென்டிரல் கல்லூரி வரை சென்றது. அங்கு அனைவரும் கூடி பொதுக்கூட்டத்தை நடத்தினர். இதில் முன்னாள் மந்திரியும், சமூக ஆர்வலருமான லலிதா நாயக் பேசியதாவது:–

தலைகுனிய வைத்துள்ளது

சமூக ஆர்வலரும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் குடிமக்களை தலைகுனிய வைத்துள்ளது. தனிமனித சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை சமுதாயத்தில் இருந்து அகற்ற வேண்டும். கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இத்தகைய மோசமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும். ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக நாம் குரல் எழுப்பாவிட்டால், நாட்டில் சர்வாதிகார போக்கு தலைதூக்கிவிடும். இன்னும் ஒரு வாரத்தில் கவுரி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.

சிந்தனைகளை கொல்ல முடியாது

கர்நாடகத்தில் பீதர் முதல் கோலார் வரையிலும், பல்லாரி முதல் சாம்ராஜ்நகர் வரையிலும் முற்போக்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அநீதிக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க முன்வர வேண்டும். இதுபோன்ற கொலைகள் மூலம் முற்போக்கு சிந்தனையாளர்களை மிரட்டிவிடலாம் என்று கருதுகிறார்கள்.

இது சாத்தியம் இல்லை. நபர்களை கொல்லலாம். ஆனால் அவர்களின் சிந்தனைகளை கொல்ல முடியாது.

இவ்வாறு லலிதா நாயக் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் கொலை செய்யப்பட்ட முற்போக்கு சிந்தனையாளர்களான நரேந்திர தாபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கலபுரகி, கவுரி லங்கேஷ் ஆகியோரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமூக ஆர்வலர் மேதா பட்கர், நர்மதா, எழுத்தாளர்கள் கிரிஷ் கர்னாட், தேவனூர் மகாதேவ், சித்தார்த்தவரதராஜ், பரகூரு ராமச்சந்திரப்பா, பகவான், சுதந்திர போராட்ட தியாகி துரைசாமி, நடிகர் சேத்தன், உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story