புஷ்கர விழாவையொட்டி மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


புஷ்கர விழாவையொட்டி மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 Sept 2017 4:30 AM IST (Updated: 13 Sept 2017 1:43 AM IST)
t-max-icont-min-icon

புஷ்கர விழாவையொட்டி காவிரி ஆற்றில் பக்தர்கள் நீராட வசதியாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு தற்போது குறைந்து விட்டது. இதன்காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 179 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 16 ஆயிரத்து 441 கனஅடியாக இருந்தது.

அதே நேரத்தில் அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட பலமடங்கு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 75.26 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 76.69 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து குறைந்த நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 700 கனஅடி வீதம் நேற்று இரவு வரை தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்த நிலையில், புஷ்கர விழாவையொட்டி காவிரி ஆற்றில் நீராட வரும் பக்தர்களின் வசதிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நேற்று இரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இரவு 9 மணிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அதிகாலை 5 மணிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படுவதையொட்டி, மேட்டூர் காவிரி கரையோரத்தில் உள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்டோரா போடப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

Related Tags :
Next Story