லிங்காயத் சமூகம் தனி மதமாக வேண்டும் என்று சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசுவாமி என்னிடம் கூறியது உண்மை


லிங்காயத் சமூகம் தனி மதமாக வேண்டும் என்று சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசுவாமி என்னிடம் கூறியது உண்மை
x
தினத்தந்தி 13 Sept 2017 2:45 AM IST (Updated: 13 Sept 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

லிங்காயத் சமூகம் தனி மதமாக வேண்டும் என்று சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசுவாமி என்னிடம் கூறியது உண்மை என்று மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

பெங்களூரு,

லிங்காயத் சமூகம் தனி மதமாக வேண்டும் என்று சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசுவாமி என்னிடம் கூறியது உண்மை என்று மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

பல்வேறு தரப்பினரும் கண்டனம்

லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை துமகூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசுவாமி ஏற்றுக்கொண்டார் என்று மந்திரி எம்.பி.பட்டீல் நேற்று முன்தினம் கூறினார்.

எம்.பி.பட்டீலின் இந்த கருத்துக்கு பா.ஜனதா தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் எம்.பி.பட்டீலிடம் மடாதிபதி சிவக்குமாரசுவாமி அவ்வாறு கூறவில்லை என்றும், லிங்காயத், வீரசைவ சமூகத்தினர் உட்கார்ந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறியதாக அந்த மடத்தில் இருந்து நேற்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

ஜீரணிக்க முடியவில்லை

நான் சித்தகங்கா மடத்திற்கு சென்றபோது, மடாதிபதி சிவக்குமாரசுவாமியிடம் பேசினேன். லிங்காயத் சமூகத்திற்கு தனி மதம் அங்கீகாரம் வழங்கும் வி‌ஷயத்தில் அவர் தனது கருத்தை தெளிவாக கூறியுள்ளார். அதாவது லிங்காயத் சமூகம் தனி மதமாக வேண்டும் என்று அவர் கூறியது உண்மை. இதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. குறிப்பாக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, சோமண்ணா உள்ளிட்டடோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

லிங்காயத், வீரசைவ போராட்டங்கள் நடைபெற்று வருவது குறித்து அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்றேன். அப்போது மடாதிபதி, லிங்காயத் சமூகத்திற்கு தனி மதம் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று சொன்னார். அப்போது ஒரு சேவகர் அங்கு வந்து, லிங்காயத், வீரசைவ சமூகம் தனித்தனி சமூகம் என்று மடாதிபதியிடம் கூறினார். அதற்கு மடாதிபதி லிங்காயத் தனி மதமாக வேண்டும். வீரசைவ சமூகம் சமீபத்தில் வந்தது என்று சொன்னார்.

உண்மையை திருத்த முயற்சி

இந்த வி‌ஷயத்தில் நானும், சித்தகங்கா மடாதிபதியும் தெளிவாக உள்ளோம். இதை தவறாக புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சிலர் உண்மையை திருத்த முயற்சி செய்கிறார்கள். நான் கூறியது பொய்யாக இருந்தால் அந்த பாவம் எனது குடும்பத்தை தாக்கட்டும். என் குடும்பம் சர்வநாசம் ஆகட்டும். நான் குடும்பத்துடன் சித்தங்கா மடத்திற்கு சென்று சத்தியம் செய்ய தயாராக இருக்கிறேன்.

நான் பசவண்ணர் வாழ்ந்த பகுதியை சேர்ந்தவன். பொய் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பசவண்ணரின் வரலாறு உருவாக வேண்டும். 8 மொழிகளில் அவருடைய வரலாறு எழுதும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்து வரும் தலைமுறைக்கு பசவண்ணரின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பு தேவை இல்லை

அரசிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு தேவை இல்லை. சில மடாதிபதிகள் என்னை அழிப்பதாக கூறி இருக்கிறார்கள். அது தொடர்பான வீடியோ என்னிடம் உள்ளது. அதை நான் பெரிதுபடுத்த மாட்டேன். அந்த வீடியோ வெளியானால் சிலர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.


Next Story