மன குழப்பத்தில் இருப்பவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அரசு மருத்துவமனையில் மனோதத்துவ மையம் அமைக்கப்படும்
மன குழப்பத்தில் இருப்பவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க புதுவை அரசு மருத்துவமனையில் மனோதத்துவ மையம் அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி காவல்துறை சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் எழுதிய தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டு, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:–
புதுவை மாநிலத்தில் காவல்துறை சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதில் தமிழகம் மற்றும் புதுவையில் ஆண்டுக்கு 45 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை செய்து கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
வாழ்க்கையில் விரக்தி அடைதல், பெற்றோர் திட்டுதல், மதுவுக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொள்கின்றனர். புதுவையில் தற்கொலைகளை தடுக்க போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதன் மூலம் புதுவையில் தற்போது தற்கொலை எண்ணிக்கை குறைந்துள்ளது.
தற்போது ரஷியாவை தலைமை இடமாக கொண்டுள்ள நீல திமிங்கல விளையாட்டுக்கு அடிமையாகி இருந்து புதுவையை சேர்ந்த ஒரு வங்கி ஊழியரும், காரைக்கால் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் தற்கொலை செய்ய இருந்த நிலையில் இருந்து மீட்கப்பட்டனர். வாழ்க்கையில் நமக்கு சாதித்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். கோழைத்தனத்தை விட்டு தைரியமாக வாழ வேண்டும்.
தங்களுடைய வேதனைகளை எல்லாம் சாதனைகளாக ஆக்க வேண்டும். தற்கொலை செய்து கொள்வதால் என்ன கிடைக்கிறது. எதுவுமே கிடையாது. அந்த குடும்பத்திற்கு தான் பெரிய இழப்பு ஏற்படும். இந்திய அளவில் தற்கொலையே இல்லாத மாநிலமாக புதுவையை மாற்ற வேண்டும். வாழ்க்கையில் மன குழப்பத்தில் இருப்பவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க புதுவை அரசு மருத்துவமனையில் மனோதத்துவ மையம் அமைக்கப்படும்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜீவ் ரஞ்சன், சந்திரன், அபூர்வா குப்தா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு ஊர்வலம் கடற்கரை சாலை காந்தி திடலில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கடற்கரை காந்திதிடலை அடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ–மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை கையில் ஏந்தியபடி சென்றனர்.