ஏரி அருகே குப்பை கொட்ட எதிர்ப்பு: பேரூராட்சி வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்


ஏரி அருகே குப்பை கொட்ட எதிர்ப்பு: பேரூராட்சி வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 Sept 2017 4:15 AM IST (Updated: 13 Sept 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

சந்தைப்பேட்டை ஏரி அருகே குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மேச்சேரியில் பேரூராட்சி வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

மேச்சேரி,

மேச்சேரி பேருராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சந்தைப்பேட்டை ஏரி அருகில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் இப்பகுதி புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது. தற்போது மழை பெய்துள்ளதால் குப்பை மக்கி துர்நாற்றம் வீசுகிறது.

மேச்சேரியில் உள்ள சாக்கடை மற்றும் சாயபட்டறை கழிவுகள் இந்த ஏரியில் கலக்கிறது. மேலும் ஆகாய தாமரை படர்ந்து பச்சைப்பசேல் என ஏரியே தெரியாமல் சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதியில் கொசு உற்பத்தியாகிறது.

ஏரியை சுற்றியுள்ள விவசாய நிலம், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீர் சாய நிறத்தில் உள்ளது. இதனால் அருகில் உள்ள கோல்காரனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.

வாகனம் சிறைபிடிப்பு

மேலும் வாரந்தோறும் புதன்கிழமை கூடும் சந்தைப்பேட்டை ஏரி அருகே குப்பைகொட்டும் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் தான் உள்ளது. இதனால் சந்தைக்கு வரும் வியாபாரிகளும், மேச்சேரி பேருராட்சி மற்றும் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை ஏரி அருகே குப்பை கொட்ட வந்த குப்பை டிராக்டரை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். அப்போது குப்பைகொட்டும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், ஏரியில் சாக்கடை சாய கழிவுகள் கலக்காமல் இருக்கவும், ஆகாய தாமரையை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

குப்பை டிராக்டர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேனும் சிறிது நேரம் அங்கு நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து, பேருராட்சி அலுவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் உயர்அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் 45 நிமிடத்திற்கு பிறகு சிறைபிடிக்கப்பட்ட டிராக்டர் மற்றும் பள்ளி வேனை பொதுமக்கள் விடுவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story