பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த 10 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகள் போலியானவை
பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த 10 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகள் போலியானவை என்று வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.
மும்பை,
பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த 10 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகள் போலியானவை என்று வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.
சந்திரகாந்த் பாட்டீல்மராட்டியத்தில் ரூ.34 ஆயிரம் கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்து மாநில அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இதையடுத்து, பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ், விவசாயிகளிடம் இருந்து ஆன்–லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் புதிய சாப்ட்வேரை நாங்கள் பயன்படுத்தினோம். விரிவான தகவல்களை இந்த சாப்ட்வேர் கேட்டதால், 10 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது.
இன்னொரு சுற்று விமர்சனம்இந்த போலி கணக்கில் விவசாய நிலத்தின் அளவு, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை இணைக்கப்படவில்லை. மேலும், இதில் பெரும்பாலான கணக்குகளை வங்கிகளும், கடன் சங்கங்களும் முறைகேடு செய்யும் நோக்கத்தில் ஏற்கனவே தொடங்கி இருக்கின்றன. அதோடு, இந்த போலி கணக்குகள் மூலம் ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் பயன்பாடுகளையும் பெற்றிருக்கின்றனர்.
நேர்மையான விவசாயிகளுக்கு உதவி செய்வதில் அரசு ஆர்வமாக இருக்கிறது. ஆகையால், இந்த பிரச்சினை அரசியல்படுத்தப்படலாம். எனவே பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் அரசு இன்னொரு சுற்று விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும்.
இவ்வாறு சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.