மருதமலை மலைப்பாதையில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள்


மருதமலை மலைப்பாதையில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 13 Sept 2017 12:00 PM IST (Updated: 13 Sept 2017 11:53 AM IST)
t-max-icont-min-icon

மருதமலை மலைப்பாதையில் காட்டுயானைகள் கூட்டமாக சுற்றித்திரிந்தன. இதை பார்த்த பக்தர்கள் பீதியடைந்தனர்.

வடவள்ளி,

மருதமலை மலைப்பாதையில் காட்டுயானைகள் கூட்டமாக சுற்றித்திரிந்தன. இதை பார்த்த பக்தர்கள் பீதியடைந்தனர்.

கோவையை அடுத்த மருதமலை வனப்பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது மலையோர கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தடாகம் மலைப்பகுதியில் இருந்து குட்டியானை உள்பட 4 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் மருதமலை பகுதியில் சுற்றித்திரிகின்றன.

நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் மருதமலை மலைப்பாதையில் உள்ள தான்தோன்றி விநாயகர் கோவில் அருகே இந்த காட்டுயானைகள் கூட்டமாக சுற்றித்திரிந்தன. பின்னர் அங்கிருந்து சாலையை கடந்து சென்றன. கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள் யானைகள் செல்வதை பார்த்து பீதியடைந்தனர்.

இதைத்தொடர்ந்து காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மருதமலை வனக்காப்பாளர் குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை அருகே இருந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். யானைகள் சென்ற பின்னர்தான் அச்சம் நீங்கி பக்தர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். அந்த காட்டு யானைகள் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு பின்னால் உள்ள வழியாக சென்று தடாகம் வனப்பகுதிக்குள் சென்றன.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, மருதமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி மலைப்பாதையில் வந்து சுற்றித்திரிகின்றன. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டாம். மேலும் வனவிலங்குகள் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு வந்தால் அவற்றை தொந்தரவு செய்யாமல் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இதனால் உயிர்ச்சேதம் ஏற்படுவதை எளிதாக தடுக்க முடியும், என்றனர்.

Next Story